ஒரு ரூபாய், ஒரு தேங்காய் மட்டும் போதும்.. மாப்பிள்ளை வாங்கிய வரதட்சணைக்கு பின்னால் அசர வைக்கும் காரணம்..

இன்றைய காலகட்டத்தில் வரதட்சணை பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது. திருமணம் செய்யும் சமயத்தில் பெண்ணின் வீட்டார், அவரது மகள் மிகவும் வசதியாக புகுந்த வீட்டிற்கு சென்று வாழ வேண்டும் என்ற நினைப்புடன் நகைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என லட்சக்கணக்கில் பொருட்களை செலவு செய்து வாங்கி கொடுக்கின்றனர்.

இதுவே வரதட்சணை என குறிப்பிடப்பட, மாப்பிள்ளை வீட்டின் சார்பில் எந்த பொருட்களையும் பெண்ணின் வீட்டாருக்கு கொடுப்பதே இல்லை. அதே வேளையில், தனது மனைவியின் மூலம் அனைத்து சொத்துக்களையும் அபகரித்து கொள்ளும் மாப்பிள்ளைகளும் இங்கே நிறைய பேர் உள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு நகைகள் வரவில்லை என்றால் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி இன்னும் நிறைய வாங்கிக் கொண்டு வரும்படி சித்திரவதைகளும் இந்த காலத்திலும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

இதன் காரணமாக, திருமணமான கொஞ்ச நாளிலேயே இல்லற வாழ்வு கசக்க தொடங்கி, விவாகரத்து வரைக்கும் சென்று விடுகிறது. இன்னொரு பக்கம், வரதட்சணை கொடுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள், விபரீத முடிவையும் எடுத்து விடுகின்றனர்.

அப்படி ஒரு சூழலில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது திருமணத்திற்காக பெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சணையும் வாங்காமல் தேங்காய் மற்றும் ஒரு ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்ட சம்பவம், பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் ஜெய் நாராயண் ஜாகர். இவர் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இவருக்கு சமீபத்தில் அனிதா வர்மா என்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. அனிதாவும் முதுகலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜாகரின் தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சமூக நீதி அவலங்களுக்கு எதிரானவர்கள் என தெரிகிறது. அதே வழியை ஜாகரும் பின்பற்ற, அனிதா வர்மா குடும்பத்தினரிடம் இருந்து வரதட்சணை வாங்கக் கூடாது என்றும் முடிவு செய்துள்ளார். அத்துடன் ஒரு தேங்காய் மற்றும் ஒரு ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்ட ஜாகர், தனது குடும்பத்தினர் ஆதரவுடனும் இதை செய்துள்ளார்.

இது பற்றி பேசும் ஜாகர், அனிதாவை அவரது பெற்றோர்கள் நன்றாக வளர்த்தி முதுகலை வரை படிக்க வைத்ததே மிகப் பெரிய சொத்து தான் என்றும் கூறி உள்ளார். மேலும் தனது மனைவி அரசு வேலைக்கு தகுதி பெற்றால் முதல் ஒரு வருட சம்பளம் முழுவதையும் அவரது பெற்றோர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என ஜாகர் விரும்பி உள்ளதாகவும் தெரிகிறது.

தங்களை அர்ப்பணித்து படிக்க வைத்த மனைவியின் பெற்றோர்களுக்கு இப்படி செய்வதே சிறந்த தருணமாக இருக்கும் என்பதற்காகவும் இந்த முடிவை ஜாகர் எடுத்துள்ளார். இந்த காலத்தில் இப்படி ஒரு மாப்பிள்ளையா என பலரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு பலரையும் அசர வைத்துள்ளார் ஜாகர்.