சட்டமன்றத்தில் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள்.. கடும் அமளியால் சபாநாயகர் வெளியேற்ற உத்தரவு

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் இன்று அவை தொடங்கியதும் காரசார விவாதமாக மாறியது. சட்டமன்றத்தில் எதிர்கட்சியான அதிமுக மற்றும் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கோஷங்களை இட்டனர்.

இதனால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து சபாநாயகர் இருக்கையை நோக்கிச்சென்று கூச்சலிட்டதால் சபாநாயகர் அப்பாவு அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற காவலர்களுக்கு உத்தரவு பிறிப்பித்தார். இதனால் எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயக்குமார் உள்ளிட்ட உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக காவலர்கள் வெளியேற்றினர்.

நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்.. கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்.. எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்ட இரங்கல்

மேலும் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று பதாகைகளை ஏந்திக் கொண்டும், கோஷங்களை இட்டும் சென்றதால் அவையில் பரபரப்பு நிலவியது. கேள்வி நேரம் துவங்குவதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சிகள் கள்ளக்குறிச்சி சம்பவத்தை கையில் எடுத்ததால் அவையிலிருந்து எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, “எதிர்கட்சித் தலைவருக்கு இது குறித்து விவாதிக்க முழு உரிமை உள்ளது. எனவே கேள்வி நேரம் முடிந்தபின் விவாதிக்கலாம் என்று கூறிய போதும் அதனை ஏற்க மறுத்துவிட்டனர்.” என்று கூறினார்.

இதுவரை கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் சிலருக்கு பார்வை பறிபோய் விட்டது. சிலருக்கு கைகால்கள் செயலிழந்து விட்டது.

இத்துயர சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும், மதுவிலக்கு அமலாக்கத்துறைக்கு எதிராகவும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சமும், சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.