ஓசூர் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 2000 ஏக்கரில் சர்வதேச தரத்தில் அமையப் போகும் மெகா திட்டம்..

சென்னை : தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் கடந்த ஜுன் 20-ம் தேதி தொடங்கி நாளை மறுநாள் (ஜுன் 29) வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயச் சம்பவத்திற்கு அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து வருகின்றன.

மேலும் கருப்புச் சட்டை அணிந்தும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் பேரவையில் 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று தொடங்கிய கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், இந்திய அளவில் மின் சாதனங்கள் மற்றும், எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள், ஆட்டோமொபைல் துறையில் பல தொழிற்சாலைகளைக் கொண்டு மிகப்பெரிய தொழில் மண்டலமாக விளங்குகிறது ஓசூர். மேலும் அதிக அளவிலான முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது.

விவசாயிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..

இவ்வாறு தொழில் துறையில் சிறந்து விளங்கும் ஓசூருக்கு தமிழக அரசு பல சிறப்புத் திட்டங்களைத் தீட்டி வருகிறது. அந்த வகையில் ஓசூருக்கான ஒரு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது.

அது மட்டுமல்லாது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் பொருட்டு ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க அவசியம் என அரசு கருதுகிறது. எனவே ஓசூரில் சுமார் 2000 ஏக்கரில் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சென்னையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது போன்று தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினையும் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஓசூரிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் பெங்களுரில் பன்னாட்டு விமான நிலையம் இருக்க தற்போது ஓசூரிலும் மற்றுமொரு விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்த அறிவிப்பால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.