எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்.. கள்ளக்குறிச்சிக்குப் போங்க.. தளபதி விஜய் போட்ட அதிரடி உத்தரவு

நாளை (ஜுன் 22) நடிகர் விஜய்யின் 50-வது பிறந்த நாள். இதனால் தமிழகம் முழுக்க அவரது ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் பேனர்கள் வைத்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அவரின் 50-வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என நினைத்தவர்களுக்கு தளபதி விஜய் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் பலியான சூழ்நிலையில், பல்வேறு தரப்பினரும் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருவோரிடம் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்தப் பகுதிக்குச் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் நாளை அவரது 50-வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கும் சூழ்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார் விஜய்.

சட்டமன்றத்தில் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள்.. கடும் அமளியால் சபாநாயகர் வெளியேற்ற உத்தரவு

அதில் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்று வருவோரின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதனை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவுப்படி செய்யுமாறு கூறியிருக்கிறார்.

அவரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடலாம் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், தமிழகத்தில் நடந்த இந்த சோக சம்பவத்தால் விஜய் தனது பிறந்த நாள் விழாவினைத் தவிர்ப்பது அவரின் அரசியல் மெச்சூரிட்டியையே காட்டுகிறது. நடிகர் விஜய்யின் இதுபோன்ற அடுத்தடுத்த நகர்வுகளால் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் தனது உறுதியான அஸ்திவாரத்தை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.