மாதம் 25000 தரும் தமிழக அரசு.. நான் முதல்வன் திட்டத்தில் சூப்பர்.. இன்று மாலை 6 மணி தான் கடைசி

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு, தங்கும் வசதியுடன் மாதம் 25000 ஊக்கத் தொகையும் கொடுத்து பயிற்சி அளிக்கிறது. இதற்கு இன்று மாலை 6மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்றே விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நான் முதல்வன் திட்டம் கல்லூரி படிப்பை முடித்த தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலைகளை வாங்கித் தரும் திட்டமாக இருக்கிறது. ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு, தங்கும் வசதியுடன் ஊக்கத் தொகையும் கொடுத்து கற்றுத் தருகிறது. இந்த திட்டத்தில் சேர தேர்வு எழுத வேண்டும்.

இட ஒதுக்கீட்டின் படி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த மையத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். வாய்ப்பிருப்போர் இந்த திட்டத்தில் சேரலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் சென்னையிலுள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர் கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. குடிமைப்பணி முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்களுக்கு ஜூலை முதல் செப்டம்பர்-2024 வரை மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.

இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமன்றி, குடிமைப்பணி முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த இதர ஆர்வலர்களும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று பயன்பெறலாம். பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் ஊக்கத் தொகையாக ரூ.25,000 “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளத. அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் சேர விரும்பும் ஆர்வலர்கள் இன்று மாலை 6 மணிக்குள் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட ஆர்வலர்கள் விவரம் இன்று (ஜூலை 4) மாலை 7 மணியளவில் இணையத்தில் வெளியிடப்படும். அதன்பின்னர் 5,6ம் தேதிஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு ஜூலை 8ம் தேதி முதல் முதன்மைத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். அரசு விதிகளுக்குட்பட்டுப் பதிவு செய்தவர்களில், 225 ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 வாட்ஸ்-அப் மூலமாகவும், www.civilservicecoaching.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.