பாம்பன் சாலைப் பாலத்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு..? உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் சொல்வது என்ன?

இராமேஸ்வரம் தீவை தமிழ்நாட்டுடன் இணைக்கும் வகையில் பாம்பன் சாலைப் பாலம் கடந்த 1988-ல் கட்டப்பட்டது. இப்பாலம் வழியாகத்தான் இராமேஸ்வரத்தினைச் சுற்றியுள்ள கடலோர கிராமங்கள் அனைத்திற்கும் செல்ல முடியும். மேலும் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலுக்கு…

Pamban Bridge

இராமேஸ்வரம் தீவை தமிழ்நாட்டுடன் இணைக்கும் வகையில் பாம்பன் சாலைப் பாலம் கடந்த 1988-ல் கட்டப்பட்டது. இப்பாலம் வழியாகத்தான் இராமேஸ்வரத்தினைச் சுற்றியுள்ள கடலோர கிராமங்கள் அனைத்திற்கும் செல்ல முடியும். மேலும் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் இந்தப் பாலம் வழியாகத்தான் வர முடியும். இதனைத் தவிர பயன்பாட்டில் பழைய ரயில் பாலம் உள்ளது. தற்போது புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சாலைப் போக்குவரத்தில் உள்ள பாம்பன் பாலத்தின் நீளம் சுமார் 2.2 கி.மீ. நீளம் கொண்டது. கனரக வாகனங்கள், பஸ், கார்கள் என அனைத்து சாலைப் போக்குவரத்தும் இந்தப் பாலத்தின் வழியாகவே நடைபெறுவதால் எப்போதும் பாம்பன் சாலைப் பாலம் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் நேற்று பாம்பன் சாலை பாலத்தின் ஐந்தாவது தூணின் அடிப்பகுதியில் சற்று பெரியதாக கான்கிரீட் இடிந்து கடலில் விழுந்தது. இடிந்த பாகத்தில் உள்ளே இருந்த கம்பிகள் வெளியே தெரிந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் போக்குவரத்து சீராக நடைபெற்ற வண்ணம் இருந்தது.

அந்தரத்தில் பறந்த கார்.. கூகுள் மேப்பால் வந்த வினை.. துடிதுடித்து பலியான 3 உயிர்கள்

பாம்பன் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக மேக வெடிப்பு ஏற்பட்டு மூன்று மணி நேரத்தில் அதிகனமழை கொட்டியது. இதனால் இப்பகுதியே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. இதனால் பாலத்தின் உறுதித்தன்மையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்று ஆய்வு நடைபெற்று வருகிறது.

அவ்வப்போது மும்பையைச் சேர்ந்த நிறுவனம் மூலமாக பாம்பன் சாலைப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெயர்ந்து விழுந்துள்ள பகுதியில் அதி நவீன கட்டுமான கான்கிரீட் மூலமாக இன்றோ அல்லது நாளையோ தூணில் இடிந்த பகுதியைச் சரிசெய்யும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடல் அரிப்பு, புயல், மழை, உப்புக் காற்று என இயற்கை சீற்றங்கள் அனைத்தும் தாங்கும் வகையில்தான் கடலின் நடுவில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.