தினசரி வாழ்வில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

உங்கள் தினசரி வாழ்க்கை ஆன்மிக மயம் ஆவதற்கு பல்வேறு விதமான வழிமுறைகள் உள்ளன. அவற்றில் மிகவும் எளிமையான வழிமுறை ஒன்றை இங்கே உங்களுக்கு அகத்தியரின் கருணையால் தெரிவிக்கின்றோம்.

காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டியவை

காலையில் கண் விழித்தவுடன் உங்கள் இரண்டு உள்ளங்கைகளையும் பார்த்தவாறு உங்களுக்கு விருப்பமான சித்தர் ஒருவரின் பெயரை மூன்று முறை ஜெபிக்க வேண்டும். (உதாரணம்:-ஓம் அகத்தீசாய நமக). பிறகு உங்கள் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை ஜெபிக்க வேண்டும். (உதாரணம்:- ஓம் தோனுகால் மாடசாமி நமக). அதன் பிறகு படுக்கையை விட்டு எழுந்திருக்கலாம்.

எப்போதும் மேற்கு திசை நோக்கியே பல்துலக்க வேண்டும். பிரஷ் வைத்து பல் தேய்த்தாலும் ஒரு நிமிடம் வரை பாம்பு விரலால் பல் தேய்க்க வேண்டும்; இப்படி செய்வதன் மூலமாக உங்களுடைய பற்கள் ஆன்மீக ரீதியாக வலிமை அடையும்.

முப்பது வயதை கடந்த ஆண் பெண் அனைவரும் குளிக்கும் பொழுது “ஓம் சுதீட்சன மகரிஷிக்கு ஜெய்” என்ற மந்திரத்தை ஒரு முறையும்” “ஓம் ஸ்ரீ சோமசுந்தர நமக” என்று ஒரு முறை ஜெபிக்க வேண்டும். இதன் மூலமாக தண்ணீரை அவமதித்த தோஷம் நம்மை நெருங்காமல் இருக்கும்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதுபோன்ற அடிப்படை ஆன்மீக உண்மைகள் நம்மில் பலருக்கு தெரியாமல் போய்விட்டன. எக்காரணம் கொண்டும் ஓடும் நதி அல்லது கோயில் குளங்கள் அல்லது குளிக்கும் ஊர் குளங்களில் எச்சில் துப்பக் கூடாது. அப்படி செய்தால் அந்த தண்ணீரை அவமதித்த சாபம் நம்மை வந்து சேரும். அது இந்தப் பிறவியிலும் அடுத்து வரக்கூடிய பிறவிகளிலும் பல்வேறு தொல்லைகளை மறைமுகமாக தரும் அதை நம்மால் உணரத்தான் முடியும். அதிலிருந்து மீள்வதற்காக அகத்தியர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இந்த மந்திர ஜபத்தை நமக்காக சிவபெருமானிடமிருந்து பெற்று தந்துள்ளார்.

குளித்து முடித்த பிறகு நாம் நமது உடலில் முதுகு பக்கத்தை முதலில் துவட்ட வேண்டும். அதன் பிறகு தான் மற்ற பகுதிகளை துவிட்ட ஆரம்பிக்க வேண்டும் என்ற விதி உண்டு. குளித்து முடித்த பிறகு சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள் நெற்றியில் விபூதியும் குங்குமமும் அணியவேண்டும். வைணவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் நெற்றியில் திருமண் அணிய வேண்டும். இதை முறையாக தினமும் செய்து வருபவர்களுக்கு கடன்கள் குறைந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில் கடன் இல்லாத வாழ்க்கை அமைந்துவிடும்.

சாப்பிடும் முறை

நமது வீட்டில் சாப்பிடும் பொழுது கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பாக நாம் உண்ணும் உணவை பார்த்தவாறு பின்வரும் மந்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒரு முறை ஜெபித்து விட்டு சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

அன்னை அன்னபூரணிக்கு நன்றிகள், அன்னை சாகம்பரி தேவிக்கு நன்றிகள், உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் பெயரை தெரிவித்து அர்ப்பணம் அர்ப்பணம் சமர்ப்பணம் (உதாரணமாக கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் அர்ப்பணம் அர்ப்பணம் சமர்ப்பணம்) என்று நினைத்து விட்டு அதன் பிறகு சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக வீட்டில் நீங்கள் சாப்பிடும் உணவு தெய்வீக பிரசாதமாக மாறுகிறது.

நாம் வசிக்கும் வீட்டில் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வி வளரும். மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் பெருகும். எக்காரணம் கொண்டும் வடக்கு நோக்கி அல்லது தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது. அது தவறு.

தூங்கும் முறை

இரவு தூங்க ஆரம்பிக்கும் முன்பாக உங்களுக்குப் பிடித்த சித்தரின் பெயரை மூன்று முறை முதலில் ஜெபிக்க வேண்டும். பிறகு உங்கள் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை ஜெபித்து விட்டு தூங்க ஆரம்பிக்க வேண்டும்.

நமது வீட்டில் கிழக்கு அல்லது மேற்கு தலை வைத்து தூங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வடக்கு அல்லது தெற்கு தலை வைத்து தூங்கக் கூடாது. அவ்வாறு செய்வது நம்முடைய உடல்நிலை மற்றும் மனநிலையை பாதிக்கும்.

இங்கே கூறப்பட்டுள்ள அத்தனை விதிமுறைகளையும் பின்பற்ற முடியாவிட்டால் பரவாயில்லை. ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்றி கொண்டுவருவது நன்று.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

இதையும் பாருங்கள்:

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews