பக்திப் பாடல்களில் புதுமையைச் செய்த இளையராஜா… கேளுங்க கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க..!

இசைஞானி இளையராஜா திரையிசைப் பாடல்களுக்கு மட்டும் பெரிய ஜாம்பவான் இல்லை. பக்திப் பாடல்களிலும் தனது திறமையை நிலை நிறுத்தியுள்ளார். அவரது படங்களில் கூட நிறைய பக்திப் பாடல்கள் உண்டு. அதே போல அம்மன் பாடல்கள் என்றாலே அது பெரும்பாலும் குத்தாட்டமாகத் தான் இருக்கும்.

ஆனால் இவர் தனது ஆல்பத்தில் ரொம்பவே மெலடியாக இந்தப் பாடலைக் கொடுத்துள்ளார். இந்தப் பாடலில் என்ன சிறப்பு என்று பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார். வாங்க, பார்க்கலாம்.

கீதாஞ்சலி என்ற படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வந்துள்ளது. ஆனால் இங்கு இசைஞானி இளையராஜா பக்தி இசைத்தொகுப்பை கீதாஞ்சலி என்ற பெயரில் கொண்டு வந்துள்ளார்.

அதில் ஒரு பக்கம் அம்மன், இன்னொரு பக்கம் முருகன் என பக்திப் பாடல்களைக் கொடுத்துள்ளார். இவற்றில் அம்மா ஜனனி என்ற அம்மன் பாடலைப் பாடி இசை அமைத்துள்ளார். இந்தப் பாடலில் 2 இசைக்கருவிகளைப் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளார். அவை வீணை, புல்லாங்குழல்.

Ilaiyaraja
Ilaiyaraja

பாடல் துவங்கும்போதே நம்மைக் கேட்க வைத்து விடும். “அம்மா ஜனனி, சரணாலயம் நீ. என் ஆன்மாவின் சங்கீதம் நீ” என்று பல்லவி வரும். ஜனனி என்றால் பிறப்புக்கு உரியவள். தாய் என்று அர்த்தம். அதனால் தான் ஜனனி என்று பாடலை ஆரம்பித்து இருப்பார். முதல் இடை இசையில் வீணையும், புல்லாங்குழலும் சேர்ந்து வரும் இடம் அழகு. முதல் சரணத்தில் ஆலாபனை அழகோ அழகு.

“தினம் தினம் தாயே காண் தரிசனங்கள், உனை விட
துணையாமோ பிற ஜனங்கள், ஜகத்தினுள் பாராட்டும் சௌந்தர்யலஹரி, ஷேமமும் நாமமே சிவசங்கரி…” என்று முதல் சரணத்தில் பாடல் வரிகள் வரும். இந்தப் பாடலை நல்லா கவனித்துப் பார்த்தால் தமிழும், சமஸ்கிருதமும் சேர்ந்து வரும். ஆனால் இரண்டையும் சரியாக உச்சரித்துப் பாடியிருப்பார் இளையராஜா.

“இருட்டினில் நீ தானே தெருவிளக்கு, இயல் இசை ஞானங்கள் நீ விளக்கு, தேய்பிறை காணாத வளர்பிறை நீயே, தேவரும் மூவரும் தொழும் இறை நீயே” என 2வது சரணத்தில் அழகாகப் பாடி முடித்திருப்பார்.

இந்தப் பாடலை காலை 5 மணிக்கு எழுந்து ஒருமுறை கேட்டால் மறுபடியும் கேட்கத் தூண்டும். அது ஏன்னு கேட்டால், இந்தப் பாட்டு மந்திரஸ்தாயியில் பாடியிருப்பார். ஓம் என்று சொல்லும் போது அதிர்வலைகள் உண்டாகும் அல்லவா. அந்த சுருதியில் வைத்து இந்தப் பாடலை பாடியிருப்பார் இசைஞானி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews