இன்று மீனாட்சி திருக்கல்யாணம்… திருமாங்கல்யம் மாற்ற மறந்துடாதீங்க..! அதுக்கு எளிய வழி இதோ..!

 

மதுரையில் நடைபெறும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. மதுரை என்றாலே மதுர மயமான வாழ்க்கையை நமக்குத் தரும் தெய்வம் எழுந்தருளிய இடம். மதுரை என்ற திருநாமத்துடன் சொக்கநாதர், அன்னை மீனாட்சியின் ஆட்சியில் மிக அழகான அற்புதமான ஊர் மதுரை.

பிறக்க முக்தி திருவாரூர், தரிசிக்க முக்தி சிதம்பரம், இறக்க முக்தி காசி, நினைக்க முக்தி திருவண்ணாமலை… ஆனால் மதுரை என்ற பெயரைக் காதில் கேட்டாலே முக்தி. 64 திருவிளையாடல்களை இறைவன் நிகழ்த்திக் காட்டிய அற்புதமான திருத்தலம். தினமும் திருவிழா தான். அதில் மிக முக்கிய நாள் தான் இந்த சித்திரை திருவிழா. அதில் மிக முக்கியமான நிகழ்வு தான் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.

அம்பாள் பட்டம் சூட்டி, செங்கோல் ஏந்தி, திக் விஜயம் செய்து, சொக்கநாதரை மணந்து கொள்ளும் நாள். அன்றைய நாளில் ஒவ்வொரு பெண்களும் தன்னோட வாழ்க்கை நல்லாருக்க வேண்டும் என்று மீனாட்சி அம்மனிடம் தங்கள் கணவருடன் மகிழ்ச்சியுடன் வாழ மனதார வேண்டிக் கொள்ளும் நாள்.

குமரகுருபரர் வாய் பேசமுடியாதவர். திருச்செந்தூர் முருகனை வேண்டியதும் வாய் பேசி விடுகிறார். கந்தர் கலிவெண்பா பாடுகிறார். அவர் மதுரை வருகிறார். அப்போது திருமலை நாயக்கர் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். மீனாட்சி பிள்ளைத் தமிழைப் பாடுகிறார். ஒவ்வொரு பருவமாகப் பாடுகிறார். குழந்தையின் வருகைப் பருவத்தைப் பற்றிப் பாடிக் கொண்டே இருக்கிறார். அப்போது தொடுக்கும் கடவுள் பழம்பாடல் என்ற ஒரு அற்புதமான பாடலையும் பாடுகிறார்.

இந்தப் பாடலைப் பாடி முடித்ததும் அழகான சிறு குழந்தையாக வரும் மீனாட்சி திருமலை நாயக்கர் மடியில் உட்கார்ந்து குமரகுருபரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். கடைசியில் தன் கழுத்தில் இருந்த முத்துமாலையை எடுத்து அவருக்கு சூட்டுகிறார்.

Meenakshi Kalyanam
Meenakshi Kalyanam

அவர் யார் இந்தக் குழந்தை என்று பார்ப்பதற்குள் கருவறைக்குள் ஓடிச் சென்று மறைந்து விடுகிறாள். அப்படி ஒரு அற்புதமான ஆச்சரியம் நிறைந்த தெய்வம் என்பதால் தான் எல்லோருக்கும் மீனாட்சியின் மேல் ஈர்ப்பு. அவருக்கோ சொக்கநாதரின் மேல் ஈர்ப்பு.

அவர் காட்டும் அன்பும், பரிவும், பாசமும் ஒவ்வொரு பெண்களும் கற்க வேண்டிய பாடம். இந்த வேளையில் நமது வாழ்க்கை, நமது குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்று பெண்கள் அம்பாளை உள்ளன்போடு வேண்டிக் கொள்ள வேண்டும்.

சுவாமி அம்பாளைக் கல்யாணம் செய்து ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பார். அந்த வேளையில் நாம் சென்று நமது கோரிக்கையைக் கேட்டால் மகிழ்ச்சியுடன் நிறைவேற்றித் தருவார். இந்த ஆண்டு இன்று (21.4.2024) காலை 8.35 மணி முதல் 8.59 மணி வரை நடக்கிறது.

திருமாங்கல்யம் மாற்ற நினைப்பவர்கள் காலையிலேயே திருமாங்கல்யத்தை சுத்தம் செய்து புதுக்கயிறுக்கு மாற்றித் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் படபடப்புடன் செய்ய வேண்டாம். கழுத்தில் சாதாரண மஞ்சள் கயிறை மாட்டிக் கொள்ளுங்கள்.

சுவாமி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நேரம் நீங்களும் மாற்றிக் கொள்ளுங்கள். பக்கத்தில் உங்கள் ;கணவர் இருந்தால் அவரை மாற்றச் சொல்லுங்கள். கணவர் பக்கத்தில் இல்லாவிட்டால் நீங்களே மாற்றிக் கொள்ளலாம். அருகில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நேரத்திற்கு ஏற்ப இப்படி மாற்றிக்கொள்ளலாம்.

Meenakshi kalyanam
Meenakshi kalyanam

இது ரொம்ப ரொம்ப விசேஷமானது. அம்பாளின் அனுக்கிரகத்தால் எல்லோருக்கும் சந்தோஷமான நிறைவான வாழ்க்கை கிடைக்கும். அன்று பாயாசம், சர்க்கரை பொங்கல் ஏதாவது பழங்கள் வைத்து அம்பாள், சுவாமிக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம். அன்று 2 பேருக்காவது சாப்பாடு வாங்கிக் கொடுக்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews