பிரசவத்திற்கு பின் ஏற்பட்ட தளர்வான வயிற்றுப் பகுதி குறித்து கவலையா? மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியுமா?

குழந்தை பிறந்த பின்பு ஒவ்வொரு தாய்மார்க்கும் உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக பிரசவத்திற்குப் பின் தாய்மார்களின் வயிற்றுப் பகுதி தொளதொள வென்று மிகவும் தளர்வாக மாறிவிடும். காரணம் கருவுற்ற நாளில் இருந்து குழந்தை வளர வளர குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப பெண்ணின் கர்ப்பப்பையும் வயிற்றுப் பகுதியும் விரிவடைய தொடங்குகிறது.

pregnant

ஒன்பது மாதங்கள் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து இருப்பது சாதாரண விஷயம் அல்ல அதற்கு ஏற்றார் போல் பெண்ணின் உடல் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். குழந்தை வெளியே வந்த பிறகு விரிவடைந்த அந்த வயிற்றுப் பகுதியானது தளர்ந்து போய் தொப்பை போன்று காட்சி தரும்.

postpartum belly

இந்த தொப்பை ஆனது நாளாக ஆக சிலருக்கு இறுக்கம் அடைந்து குறைந்து விட்டாலும் பலருக்கு இது நிரந்தரமாகவே தங்கி விடுகிறது. இது அந்த தாய்மார்களை மிகவும் கவலைக்குள்ளாக்குகிறது. இதற்காக பிரசவத்திற்கு பின் உடனடியாக கடுமையான டயட்களில் இருப்பதோ அல்லது மருத்துவர் அறிவுரை இன்றி உடற்பயிற்சி செய்வதோ மிகவும் ஆபத்தானது.

என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம்

தாய்ப்பால் ஊட்டுதல்:

breastfeeding

உங்கள் குழந்தைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாய்ப்பாலை மட்டும் கொடுக்க பாருங்கள். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் அதிக அளவு எரிக்கப்படுகிறது. பிரசவத்தின் பொழுது கூடிய உடல் எடையை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நாம் வெகுவாக குறைக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். மருத்துவர்கள் குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கவும் என்று பரிந்துரைக்கிறார்கள். எனவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தளர்ந்து போன பகுதிகள் இருக்கமடையும் உங்கள் தொப்பை வெகுவாக குறையும்.

எளிய நடைப்பயிற்சி:

சி செக்சன் செய்த தாய்மார்கள் மருத்துவரிடம் பரிசோதித்து உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பகுதிகள் ஓரளவு சரியான பின் நடைப்பயிற்சியை செய்ய தொடங்குங்கள். உங்கள் குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்துக்கொண்டோ இல்லை சுமந்த படியோ மெதுவாக காற்றோட்டமாய் காலையும் மாலையும் ஒரு அரை மணி நேரமாவது காலாற நடங்கள். இது உங்கள் வயிற்றுப் பகுதியை இறுக்கமடைய செய்ய ஒரு எளிய வகையாகும்.

வயிற்றை கட்டுதல்:

இது நம் முன்னோர்கள் செய்து வந்த முறை. சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு குழந்தை பிறந்த உடனே சில நாட்களில் வயிற்றை சுற்றி இறுக்கமாக துணியினால் கட்டி விடுவார்கள். இது பிரசவத்திற்கு பின் ஏற்பட்ட தளர்வான வயிற்றுப் பகுதியை குறைத்திட அப்பொழுது பயன்படுத்திய முறை. சி செக்சன் செய்த பெண்கள் உடனடியாக வயிற்றின் மேல் இவ்விதமான துணிகளை கட்டுவது ஆபத்து என்றாலும் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட பெல்ட் உபயோகப்படுத்தலாம்.

மசாஜ் செய்தல்:

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் கொண்டு தளர்வான வயிற்றுப் பகுதிகளை நன்கு மசாஜ் செய்யுங்கள். தொடர்ந்து மசாஜ் செய்வதன் மூலம் சுருக்கங்கள் மறைவதோடு வயிற்றுப் பகுதியும் வெகுவாக குறைய தொடங்கும்.

யோகாசனம் செய்தல்:

வயிற்றுப் பகுதியை குறைப்பதற்காக உள்ள யோகாசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்யலாம். இவை மன அமைதியை தருவதோடு வயிற்றையும் இறுக்கமடைய செய்யும்.

நல்ல தூக்கம்:

குழந்தை பிறப்பிற்கு பின் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செல்லும் பல தாய்மார்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் இழக்கிறார்கள். தாய்மார்களுக்கு தூக்கம் என்பது அரிதாகிப் போன விஷயம் என்றாலும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒரு குட்டி தூக்கத்தை தவற விட்டு விடாதீர்கள். தூக்கம் உங்கள் உடல் மீண்டும் பழைய நிலைக்கு மாற தேவையான உற்சாகத்தையும் ஆற்றலையும் உங்களுக்கு கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உணவுப் பழக்கம்:

பாலூட்டும் தாய்மார்கள் அதிகமாக உண்ண வேண்டும் அப்பொழுதுதான் பால் கொடுக்க முடியும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உடலுக்கு தேவையான அளவு உணவை எடுத்துக் கொண்டாலே போதும். ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் இருந்தாலே நன்றாக பால் கொடுக்க முடியும். உணவினை ஒரே அடியாக எடுத்துக் கொள்ளாமல் பிரித்து சாப்பிட பழகிக் கொண்டால் தேவையற்ற கொழுப்புகள் வயிற்று பகுதியில் சேராது.

mother

சி செக்சன் செய்தவர்களுக்கு தொப்பை விழும் அவர்களால் மீண்டும் பழைய நிலைக்கு மாற முடியாது என்று நினைக்க வேண்டாம். சில எளிமையான நடைமுறைகளையும் பழக்கவழக்கத்தையும் மாற்றினாலே போதும். அனைத்தையும் விட உங்கள் உடல் நிலையை குறித்து தேவையற்ற பதற்றத்தையும் கவலையையோ வரவழைத்து கொள்ளாமல் உங்களின் குழந்தையோடு உங்கள் உடல் நலனையும் சேர்த்து பராமரித்து மகிழ்ச்சியாக தாய்மையை அனுபவியுங்கள்.