ஒருவழியாக ரிலீஸ் ஆகப் போகும் விஷாலின் மதகஜராஜா.. ஆகஸ்ட்டில் வெளியிடத் திட்டம்..

சினிமா உலகில் எத்தனையோ படங்கள் ஒரு சில நாட்கள் படம்பிடிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டுள்ளது. வேறு சில படங்கள் நடிகர் நடிகைகளின் கால்ஷீட் பிரச்சினையால் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி முடங்கிக் கிடக்கும் படங்களின் எண்ணிக்கை ஏராளம். அந்த வகையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்டு இன்னும் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் படம் தான் விஷால் நடித்த மதகஜராஜா.

சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம்ஸ் சர்கியூட் தயாரிப்பில் உருவான இப்படத்தில் விஷாலுடன் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சதா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் சார்பட்டா பரம்பரை வேம்புலி, மணிவண்ணன், சோனுசூட் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இசை விஜய் ஆண்டனி. படத்தின் பாடல்கள் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்யப்பட்டு ஹிட் ஆனது. ஆனால் படம் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

சூர்யவம்சம் ஷூட்டிங் ஸ்பாட்டில் மாஸ்டர் மகேந்திரன் செஞ்ச அட்ராசிட்டி.. கோபத்தில் விக்ரமன் எடுத்த முடிவு..

கடந்த 2012-ல் தயாரிக்கப்பட்ட இப்படம் பல்வேறு முறை ரிலீஸ் தேதி தள்ளிக் கொண்டே போனது. இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தற்போது வேறு லெவலுக்குச் சென்று விட்டனர். MGR என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் இடம்பெற்ற பாடலான சிக்குபுக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி.. பாடல் ரீல்ஸ்களில் இன்னும் பிரபலமாக இருக்கும் ஒரு பாடலாக விளங்குகிறது. ஆக்ஷன், காமெடி என சுந்தர் சி-யின் அத்தனை மசாலாக்களையும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள மதகஜராஜா குறிப்பிட்ட காலத்தில் ரிலீஸ் ஆகியிருந்தால் கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெற்றிருக்கும்.

ஏனெனில் அப்போது விஷால் உச்சநடிகராக இருந்தார். மேலும் சந்தானத்தின் காமெடி இல்லாமல் படங்களே இல்லை என்னும் அளவிற்கு தொடர்ச்சியாக சந்தானம் காமெடியில் கலக்கி வந்தார். விஜய் ஆண்டனியின் இசையும் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. தற்போது வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விட்டதால் வருகிற ஆகஸ்ட் மாதம் 12 வருட காத்திருப்புக்குப் பின் திரையிடப்பட உள்ளது. இதனால் விஷாலின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.