3 வருஷம்.. சிவகுமாரோட மகன்னு தெரியாமலே சூர்யாவுடன் வலம் வந்த கூட்டம்.. நேருக்கு நேர் படத்தின் சுவாரஸ்ய பின்னணி..

தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் உடல் மொழி மட்டும் இல்லாமல் ஆடை தொடங்கி தனது முகபாவனைகள் வரை அந்த கேரக்டருக்கு ஏற்ப மாறுபட்டு அற்புதம் காட்டும் குணம் படைத்தவர் தான் நடிகர் சூர்யா. உடல் அளவிலும் கூட அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவைப்படுகிறது என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு படத்திலும் தனது உடல் எடையை மாற்றி மிக கடினமாக உழைத்து அர்ப்பணிப்போடு வேலை செய்யும் நடிகரான சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து நிறைய படங்கள் மிக விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

சிவா நடிப்பில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர ஹிந்தி திரைப்படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் என அடுத்தடுத்து பெரிய ப்ராஜெக்ட்களை கையில் வைத்துள்ள சூர்யா, நிச்சயம் கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளில் கோட்டை விட்ட வெற்றியை பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

நடிப்புக்காக தன்னால் என்ன செய்ய முடியுமோ அது எப்படிப்பட்ட கடினமான விஷயமாக இருந்தாலும், வெற்றி கண்டு அசத்தி வருவதில் கில்லாடியாக இருக்கும் சூர்யா, ஒரு நடிகராக அறிமுகமானது நேருக்கு நேர் திரைப்படத்தில் தான்.

பிரபல இயக்குனர் வசந்த இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் விஜய், ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இவர்களுடன் சிம்ரன், கௌசல்யாவும் நாயகிகளாக நடித்திருந்த நிலையில் சூர்யாவின் முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி வரவேற்பை பெற்றிருந்தது.

ஆனால் இந்த திரைப்படத்தில் அறிமுகமாவதற்கு முன்பாக நடிகர் சூர்யா மூன்று ஆண்டுகள் அம்பத்தூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இங்கே சுமார் மூன்று ஆண்டுகள் வரை சூர்யா பணிபுரிந்து வந்த சூழலில், அதற்கு நடுவே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தேடி வந்துள்ளார். அப்போது தான் அவருக்கு நேருக்கு நேர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுவும் தனது முதல் படத்திலேயே அவருக்கு சிம்ரன் ஜோடியாக நடிக்க இருந்த நிலையில் இது பற்றி தன்னிடம் பணிபுரிந்தவர்களிடம் தெரிவித்துள்ளார் சூர்யா. சிம்ரன் ஒரு சில திரைப்படங்களில் நடித்தே அந்த சமயத்தில் மிகப்பெரிய நடிகையாக இருக்க, அவர் உனக்கு ஜோடியா என்றும் கேலி செய்துள்ளனர் நண்பர்கள்.

அப்போது தான் அந்த நண்பர்களிடம் விவரத்தை தெரிவித்துள்ள சூர்யா தான் முன்னணி நடிகர் சிவகுமாரின் மகன் என்றும் பணிபுரியும் இடத்தில் அது நிச்சயம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்றும் தந்தை கூறியதால் சாதாரண ஒருவனாக உங்களுடன் சேர்ந்து பணிபுரிந்ததை கூறி இருக்கிறார். இதனைக் கேட்டதும் அங்கிருந்த அனைவருமே ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.