ஜென்டில்மேனுக்கு முன்பே லட்டு மாதிரி வந்த இயக்குனர் வாய்ப்பு.. எஸ்ஏசியை பிரிய மனமில்லாமல் ஷங்கர் எடுத்த முடிவு..

இந்திய சினிமாவில் ராஜமௌலி, பிரசாந்த் நீல் உள்ளிட்ட பல பிரம்மாண்ட இயக்குனர்கள் இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரம்மாண்ட இயக்குனர் என்று அந்தஸ்துடன் அறியப்பட்டவர் தான் பிரபல இயக்குனர் ஷங்கர். தமிழ் சினிமாவில் இவர் முதல் திரைப்படம் எடுத்த எடுக்கத் தொடங்கியது முதல் தற்போது வரை அதிகம் செலவு செய்து மிக புதுமையாக பல்வேறு விஷயங்களை பாடல்களிலோ அல்லது படத்தில் வரும் காட்சிகளிலோ புகுத்துவதால் பிரம்மாண்ட இயக்குனர் என்றும் அறியப்பட்டார்.

அது மட்டுமில்லாமல் பாகுபலி, கேஜிஎஃப் என இந்திய சினிமா கண்ட பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு முன்பாகவே ரஜினிகாந்தை வைத்து எந்திரன் என்ற திரைப்படத்தை உருவாக்கி சிஜி காட்சிகளில் ஹாலிவுட் தரத்திற்கு சவால் விட்டிருந்தார் இயக்குனர் ஷங்கர். எப்போதும் அவரது தொலைநோக்கு பார்வை மிக ஆழமாக இருக்கும் சூழலில் புது புது தொழில்நுட்பங்களையும் தன் திரைப்படத்தில் கொண்டு வந்து ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவரக்கூடியவர்.

ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் பதித்த ஷங்கர் அதன் பின்னர் இந்தியன், முதல்வன், சிவாஜி, அந்நியன், எந்திரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் கடைசியாக 2.0 கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில் அதன் பின்னர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் படுபிசியாக பணிபுரிந்து வருகிறார்.

இதில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ள நிலையில் இதன் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இந்தியன் படத்தின் முதல் பாகத்தை போல இதுவும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமையம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் இயக்குனர் ஷங்கரை குறித்து அவரது குருவான இயக்குனர் எஸ்ஏசி தெரிவித்த கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

“ஒரு உதவி இயக்குனர் என்றால் ஒரே இயக்குனருடன் ஐந்து முதல் ஆறு படங்கள் பணிபுரிவார்கள். அதன் பின்னர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து அப்படியே சென்று விடுவார்கள். ஆனால் ஷங்கர் என்னுடன் ஐந்து முதல் ஆறு படங்கள் பணிபுரிந்த சமயத்தில் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் நல்ல இயக்குனர்கள் யாராவது இருந்தால் கூறுங்கள் என என்னிடம் கேட்டார்.

நான் அப்போது ஷங்கரின் பெயரை பரிந்துரை செய்தேன். ஆனால் இது பற்றி ஷங்கரிடம் கேட்க, ‘இல்லை சார் எனக்கு இன்னும் சில படங்கள் உங்களுடன் பணிபுரிந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்’ என கூறினார். அப்படியே அவர் அன்று அர்ப்பணிப்புடன் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதால் தான் இன்று வெற்றிக்கு மேல் வெற்றிகளை பெற்று பெரிய இடத்தில் இருக்கிறார்” என மனதார பாராட்டி உள்ளார் எஸ்ஏசி.