வைரலாகும் வைரமுத்து புகைப்படம்.. பேனா இருக்க வேண்டிய கையில் துப்பாக்கி ஏந்தி போஸ்..

என்ன கவிஞரே கையில் பேனாவுடன் எப்போதும் காட்சி அளிப்பீர்கள்.. எப்போது துப்பாக்கி ஏந்தினீர்கள்..? கவிதைப் போர் வெடிக்கட்டும். இந்த கமெண்ட் எல்லாம் தற்போது கவிஞர் வைரமுத்துவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அப்படி என்ன செஞ்சார் தெரியுமா வைரமுத்து? கையில் துப்பாக்கி ஏந்தியவாறு கொடுத்த போஸ்தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைராலாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தின் புதுமைக் கவிஞராகவும், உரைநடை எழுத்தாளராகவும், புதினங்கள் படைப்பவரும், திரைப்படப் பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து தற்போது ஸ்விட்சர்லாந்து சென்றுள்ளார். அங்கு எடை குறைந்த, இயக்க எளிதான எஸ்.ஐ.ஜி 550 ரக துப்பாக்கியை கையில் ஏந்தி போஸ் கொடுத்துள்ளார். இதனைப் பற்றி தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

நான் ஏந்தியிருக்கும்
எஸ்.ஐ.ஜி 550 துப்பாக்கி
ஏ.கே 47ஐக் கடைந்தெடுத்தது
மற்றும் கடந்தது

எடை குறைந்த
இயக்க எளிதான
துல்லியத் துப்பாக்கி இது

சுவிட்சர்லாந்து
பள்ளிக் கல்வியில்
இது வீரப் பயிற்சிக்கு
வினைப்படுகிறது;
ராணுவ சேவைக்கு
விதையிடுகிறது

இந்தப் பயிற்சி
தன்னம்பிக்கை ஊட்டித்
தன்னெழுச்சி தருவதாக
நண்பர் கல்லாறு சதீஷின் மகள்
இனிஷா தெரிவித்தார்

தோட்டாத் தூணியை நிரப்புதல்
நெம்புதல்
விசை முடுக்கல்
சுடுகுறி பார்த்தல்
சுடல் என்பன
இதன் படிநிலைகள்

விருப்பமுள்ளவர்கள்
பயிற்சி பெறக்
கல்வித் திட்டங்கள்
கைதட்டி வரவேற்க வேண்டும்

தோழன் செய்யாததைத்
துப்பாக்கி செய்யும்

எனக்கு இந்தப் பயிற்சி
இல்லையே என்று – நான்
குறைமனிதனாய்க்
குமுறுகிறேன்..”

என்று பதிவிட்டு தன்னால் பயிற்சி பெற முடியவில்லையே என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வைரமுத்து. வைரமுத்துவின் இந்தப் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை தெறிக்க விடுகின்றனர். அண்மையில் துபாய் சென்ற அவர் அங்கு கழிவு மேலாண்மை மேற்கொள்ளும் விதம் பற்றியும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தான் செல்லும் இடங்களில் அங்கே மேற்கொள்ளப்படும் சிறப்பு திட்டங்களைத் தெரியப்படுத்தி வருகிறார் வைரமுத்து.