போடுறா வெடியை.. லியோ செகண்ட் சிங்கிள் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கிய விஜய்!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் மற்றும் சாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாக்கி வருகிறது.

அடுத்த மாதம் லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து:

ஆனால், கடைசி நேரத்தில் லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழாவே நடக்காது என்கிற அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரியில் நடைபெற்ற அசம்பாவிதம் போல லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அசம்பாவிதம் நடைபெற்றால் அது நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும் என்பதால் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் அதிருப்தி:

அரசியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதுதான் காரணம் என்றும் இதற்கெல்லாம் நடிகர் விஜய் கூடிய சீக்கிரமே தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து பதிலடி கொடுப்பார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இரவு லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து என்கிற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட நிலையில் உடைந்து போன ரசிகர்கள் இன்று மாலை வரை சமூக வலைத்தளங்களில் புலம்பி வந்தனர்.

செகண்ட் சிங்கிள் அறிவிப்பு:

இந்நிலையில், ரசிகர்களை மகிழ்ச்சி மோடுக்கு கொண்டு செல்ல அதிரடியாக லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

பேடாஸ் எனும் தலைப்பில் அனிருத் இசையமைத்து பாடியுள்ள லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பு வெளியான நிலையில், கவலை மறந்து லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் ரெக்கார்டு பிரேக்கிங் பாடலாக மாற்ற என்னென்ன முயற்சிகளை செய்ய முடியுமோ அத்தனை முயற்சிகளையும் செய்ய வேண்டும் என விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

பெரியளவில் புரமோஷன்:

அக்டோபர் முதல் வாரத்தில் லியோ படத்தின் டிரைலர் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் இந்த முறை நடிகர் விஜய்க்கு செம்ம வெயிட்டான படமாக லியோ படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

மேலும், பான் இந்தியா படமாக லியோ உருவாகி உள்ள நிலையில், ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை மற்ற மாநிலங்களில் நடத்தவும் லியோ படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், நடிகர் விஜய் அதில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.