திருப்பதியில் தலைமுடி காணிக்கை கொடுத்த பி.சுசீலா.. பக்திப் பாடலைப் பாடிக் கொண்டே மனதுருகி வேண்டுதல்..

திருப்பதி : மெல்லிசை அரசி, இந்தியாவின் நைட்டிங்கேல், கான சரஸ்வதி என இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரபல பாடகி தான் பி. சுசீலா. ஆந்திராவின் விஜயநகரத்தில் பிறந்த புலப்பாக்க சுசீலா என்ற பி. சுசீலா இந்திய மொழிகள் பலவற்றிலும் கிட்டத்தட்ட 25, 000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

இந்தியில் எப்படி லதா மங்கேஷ்கர் குரல் சாகா வரம் பெற்றதோ அதேபோல் தமிழில் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பி.சுசீலாவின் குரலில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றவை. சென்னை வானொலியில் பாடிக் கொண்டிருந்த பி.சுசீலாவை பிரபல இயக்குநர் பிரகாஷ் ராவ், 1950-ல் பெற்ற தாய் என்ற படத்திற்கு முதன் முதலாகப் பின்னணி பாட வைத்தார்.

1955-ல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம் பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்., உன்னைக் கண் தேடுதே.. போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக பி.சுசீலா பிஸியான பின்னணிப் பாடகியாக உருவெடுத்தார். அன்று ஒலிக்கத் தொடங்கிய குரல் 88 வயதிலும் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் வயோதிகத்தால் பாடுவதை நிறுத்தினாலும் அவ்வப்போது சில மேடைகளில் பழைய ஞாபகங்களைச் சுமந்தபடியே பழைய பாடல்களைப் பாடி வருகிறார் பி.சுசீலா.

ஓசூர் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 2000 ஏக்கரில் சர்வதேச தரத்தில் அமையப் போகும் மெகா திட்டம்..

இந்நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க பி.சுசீலா திருமலைக்குச் சென்றிருந்தார். அங்கு தனது முடியைக் காணிக்கை கொடுத்தார். அதன்பின் தள்ளாடி உதவியாளர்களுடன் நடந்து வந்த சுசீலா ஏழுமலையான் பக்திப் பாடலைப் பாடியவாறே வந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கிருஷ்ணகானம் ஆல்பத்தில் கோலத்து பசுக்கள் எல்லாம்.., கோபியரே கோபியரே.., குருவாயூருக்கு வாருங்கள்.. போன்ற பாடல்களை பகவான் விஷ்ணு மீது பக்தி கொண்டு பாடியிருக்கிறார். மேலும் கண்ணா கருமைநிறக் கண்ணா என கடவுளை அழைத்தும் பாடியிருக்கிறார் பி.சுசீலா.

தமிழ்நாடு அரசின் இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகம் அண்மையில் பி.சுசீலாவிற்கு டாக்டரேட் பட்டம் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.