நான் இன்னிக்கு இந்த நிலைமையில் இருக்கிறேன் என்றால் அதற்கு இவர்தான் காரணம்… போஸ் வெங்கட் பகிர்வு…

போஸ் வெங்கட் தமிழ் திரையுலகில் பணியாற்றும் தொலைக்காட்சி நடிகர் மற்றும் சினிமாவில் துணை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பவர். தனது பதினேழாவது வயதில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் சென்னைக்கு வந்தவர்.

ஆரம்பத்தில் வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் பிழைப்பிற்காக டிரைவராக பணியாற்றினர். பின்னர் சின்னத்திரை தொலைக்காட்சியில் சிறு சிறு கதாபாத்திரத்தில் தோன்றினார். பின்னர் சன் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிய சின்னத்திரை தொடரான ‘மெட்டி ஒலி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து சினிமாவில் போஸ் வெங்கட் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் பாரதிராஜா அவர்களின் ‘ஈர நிலம்’ படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘சிவாஜி’, ‘மருதமலை’, ‘தாம் தூம்’, ‘சரோஜா’, ‘சிங்கம்’, ‘கோ’, ‘யாமிருக்க பயமே’, ’36 வயதினிலே’, ‘கவன்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் போஸ் வெங்கட்.

‘கவன்’ மற்றும் ‘சிங்கம்’ ஆகிய திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார் போஸ் வெங்கட். இது தவிர, மம்முட்டி மற்றும் திலீப் உடன் இணைந்து சில மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும், 2020 ஆம் ஆண்டு ‘கன்னி மாடம்’ என்ற படத்தையும் போஸ் வெங்கட் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட போஸ் வெங்கட், திரையுலகில் நுழைந்த ஆரம்பகட்டத்தில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், சின்னத்திரை மெட்டி ஒலி தொடரில் நடிக்கும் போது நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன், என் மீது வேர்வை வாடை வருகிறது, இவருடன் சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று நடிகைகள் சொல்லியிருக்கின்றனர். எப்படி நடந்துக்கணும்னு எனக்கு அப்போ தெரியாது, ஏனென்றால் நான் கிராமத்தில் இருந்து வந்தவன். இப்போது இப்படி மாறி இந்த நிலைமையில் இருக்கிறேன் என்றால் அதற்கு என் மனைவி தான் காரணம் என்று பகிர்ந்துள்ளார் போஸ் வெங்கட்.