வெச்சான் பாரு ஆப்பு.. எக்ஸ் தளத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் சண்டைக்கு புது ஸ்கெட்ச் போட்ட எலான் மஸ்க்..

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தின் பயன்பாடு அதிகமாகி வரும் நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல செயலிகளில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் நேரத்தை செலவழித்தும் வருகின்றனர்.

ஒரு பக்கம் தங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இந்த சமூக வலைத்தளங்களில் பலர் உலவி வந்தாலும் இன்னும் சிலர் ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பதற்கும், பொழுதை கழிப்பதற்கும் வலம் வந்த வண்ணம் உள்ளனர். அப்படி இருக்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக ட்விட்டர் தளத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வாங்க போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

இதன் பின்னர் ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்த எலான் மஸ்க், அதன் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றி இருந்தார். அத்துடன் மட்டுமில்லாமல், எக்ஸ் தளத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்ததுடன் ப்ளூ டிக் வைத்துள்ள பயனர்களுக்கு மாதம் பணம் கொடுத்தும் வந்தார் எலான் மஸ்க். இப்படி பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்திய எலான் மஸ்க் பற்றிய செய்தி அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகியும் வந்தது.

அப்படி ஒரு சூழலில் தான் சமீபத்தில் தமிழ் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது மிக ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தி உள்ளார் எலான் மஸ்க். அதாவது ஒரு பயனாளி இன்னொரு அக்கவுண்டு பதிவை லைக் செய்தால் அதனை மற்றொருவரால் பார்க்க முடியாது என்ற வசதியை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளார்.

அதன்படி உதாரணத்திற்கு நாம் ஒரு பதிவை லைக் செய்தால் அதை நிச்சயம் மற்றவர்களால் பார்க்க முடியாது. முன்னதாக எக்ஸ் தளத்தில் பிரபலமாக இருக்கும் பலரும் ஏதாவது சர்ச்சைக்குரிய பதிவை லைக் செய்யும்போது அது மற்ற அனைவருக்குமே பார்க்க முடியும். இதனால், ஒருவரது தனிப்பட்ட விஷயங்கள் அதிக விமர்சனங்களை உண்டு பண்ண, தற்போது அதற்கான முடிவும் கிடைத்துள்ளது.

இப்படி எக்ஸ் தளத்தில் பிரபலமாக இருப்பவர்களுக்கும், பயனாளர்களுக்கும் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை எந்தவித நெருக்கடியுமின்றி தெரிவிப்பதற்கான இடத்தை தான் எலான் மஸ்க் இந்த வசதி மூலம் தற்போது அறிமுகம் செய்துள்ளார். பொதுவாக தமிழ் சினிமாவில் இருக்கும் சில பிரபலங்கள் ஏதாவது ஒரு நடிகருக்கு எதிரான கருத்துக்களை லைக் செய்யும் பட்சத்தில் அது வெளிச்சத்திற்கு வந்து அவர்கள் மீதான விமர்சனங்களும் அதிகமாகிறது.

அதேபோல அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு இந்த லைக் போடும் விவகாரம் முக்கிய காரணமாக இருப்பதால் தற்போது அதற்கான ஒரு முற்றுப்புள்ளி உருவாகியுள்ளதாக தெரிகிறது.