எங்கேயும் எப்போதும் கிளைமேக்ஸ் பஸ் ஆக்சிடெண்ட் சீன் எடுத்தது இப்படித்தான்..ரகசியம் உடைத்த இயக்குநர்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி கணேஷ் தெலுங்குப் படம் மூலம் தனது இயக்குநர் கனவை நனவாக்கியவர் எம். சரவணன். முதல் படத்தினை தெலுங்கில் இயக்கியவர் அடுத்த படமான எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார்.

கடந்த 2011-ல் வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஜெய், சர்வானந்த், அஞ்சலி, அனன்யா ஆகியோர் நடித்திருந்தனர். இருவேறு கதைக்களங்களுடன் சென்னை மற்றும் திருச்சியில் நடைபெறுவதாக இப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும்.

படத்தில் அஞ்சலி, ஜெய் ஜோடி மிகவும் பேசப்பட்டது. குறிப்பாக மாசமா.. சொட்ட சொட்ட நனைய வைத்தாய்.. போன்ற பாடல்கள் ரிப்பீட் மோடில் ரசிகர்களால் கேட்கப்பட்டது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பல கோடி வசூலித்தது. இப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது கிளைமேக்ஸ் காட்சி தான். சற்றும் எதிர்பாரா வகையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் காட்சிகளும், மரண ஓலங்களும் ரசிகர்களை இன்று பார்த்தாலும் உறைய வைக்கும்.

இந்தக் காட்சிக்காக இயக்குநர் எம்.சரவணன் தயாரிப்பு நிறுவனத்திடம் 1 கோடி பட்ஜெட் சொல்லியிருக்கிறார். மொத்த படமே 5 கோடி என்றால் அதில் கிளைமேக்ஸ் காட்சி மட்டும் 1 கோடி என்றால் எப்படி என தயாரிப்பு தரப்பு கேட்க, அதற்காக அவர் ஏற்கனவே டம்மியாக எடுத்த காட்சிகளை விளக்க இதேபோல் எடுக்க முடியுமா என்று கேட்டுள்ளனர். இயக்குநர் முடியும் என உறுதியாகச் சொல்ல அதன்பின் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது.

இத மட்டும் நான் செய்யாம இருந்திருந்தா.. திருமண வாழ்க்கை குறித்து ரேவதி உடைத்த ரகசியம்

இந்த விபத்து காட்சி படமாக்கப்பட்ட போது இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பாதிக்கும் மேலாக உள்ளே செல்வது தான் திட்டம். மேலும் மோதும் போது வாழை இலைகள் பறந்து விழும் காட்சிக்காக வாழை இலைக்குள் சிறிய வெடிகளை வைத்தும் படமாக்கி இருக்கிறார்கள்.

அனைத்தும் திட்டமிட்டபடி வைத்தபிறகு இயக்குநர் ஆக்சன், கேமரா என்று சொல்லிய போது இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பாதி உள்ளே செல்லவில்லை. ஆனால் சுற்றியிருந்த பார்வையாளர்கள் அதை வியப்புடன் பார்த்து ஆரவாரம் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இயக்குநர் சரவணன் மனதில் நினைத்தது வரவில்லை என்றாலும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ததையடுத்து அந்தக்காட்சியை அப்படியே படமாக்கினார். இதற்காக 7 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது. இப்படித்தான் எங்கேயும் எப்போதும் கிளைமேக்ஸ் பஸ் விபத்து காட்சி படமாக்கப்பட்டது.