கும்கி படத்தால் மரியாதை இழந்து நடிகனான அப்பா நடிகர்.. கவிஞர் ஜோ மல்லூரிக்கு வந்த சோதனை

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கும், அப்பா கதாபாத்திரத்திற்கு புது இலக்கணம் எழுதியவர் கவிஞர் ஜோ மல்லூரி. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ஜோ மல்லூரி அடிப்படையில் ஓர் இலக்கியவாதி. கவிதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுகதை, நாவல் என இலக்கியத் துறையில் ஈடுபாட்டுடன் பயணிப்பவர். விலை மகளின் நாட்குறிப்பு, தமிழாரம் போன்ற இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார் ஜோ மல்லூரி.

இலக்கிய உலகில் நன்கு அறியப்பெற்ற ஜோ மல்லூரி திரைப்படப் பாடலாசிரியராக முயற்சி செய்து கொண்டிருந்தார். எனவே இவர் தனது கவிதைத் தொகுப்புகளை பல்வேறு இயக்குநர்கள், இசையமைப்பாளர்களிடம் கொடுத்து வாய்ப்புக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் பிரபு சாலமன் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அந்த நேரத்தில் மைனா படம் பிரபு சாலமனுக்கு ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இதனையடுத்து தனது அடுத்த படமான கும்கி பட வேலைகளில் ஈடுபட்டிருந்தார் பிரபு சாலமன். ஒருமுறை ஜோ மல்லூரி எழுதிய கவிதைத் தொகுப்பு புத்தகத்தின் அட்டைப் படத்தினைப் பார்த்தார்.

அதில் ஜோ மல்லூரி தாடி அதிகம் வளர்த்து டை அடிக்காமல் தனது புகைப்படத்தினை அட்டைப் படத்தில் பிரசுரித்திருந்தார். இதனைப் பார்த்த பிரபு சாலமனுக்கு தான் நினைத்த கதாபாத்திரத்திற்கான முக அமைப்பு கிடைத்த மகிழ்ச்சியில் ஜோ மல்லூரிக்கு போன் செய்திருக்கிறார்.

அப்போது அவர் தாடி ஏதும் இல்லாததால் நீங்கள் அட்டைப் படத்தில் இருப்பது போன்ற தோற்றம் பெற எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்டு அதேபோல் தோற்றத்துடன் வாருங்கள் என்று கூறியிருக்கிறார். தனக்கு பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்கும் என்றிருந்த வேளையில் நடிக்க அழைக்கிறார்களே என்று அதனை மறுத்திருக்கிறார் ஜோ மல்லூரி. ஆனால் பிரபு சாலமன் கண்டிப்பாக நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று போட்டோ ஷுட் எடுத்துப் பார்த்து திருப்தி ஆகியிருக்கிறார்.

காமெடியனாக இருந்த சந்தானம் ஹீரோவாக யார் காரணம்? பிரபலம் சொல்ற தகவல் இதுதான்..!

தொடர்ந்து கும்கி ஷுட்டிங் தொடங்க லட்சுமி மேனனுக்கு அப்பா கதாபாத்திரம் கிடைக்கிறது. மேலும் ஜோ மல்லூரிக்கு நடிக்கவும் தெரியவில்லை. ஓர் இலக்கியவாதியாக பக்கம் பக்கமாக தமிழ் இலக்கியத்தினை மனப்பாடம் செய்தவருக்கு 4 வரி கூட இல்லாத சினிமா வசனம் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது பெரும் சவாலாகவும், கூச்சமாகவும் இருந்திருக்கிறது. அதுவரை ஜோ மல்லூரியை மரியாதையாக அழைத்த பிரபு சாலமன், ஜோ மல்லூரி தொடர்ந்து பல டேக் எடுக்க கடுப்பாகி அந்த ஆளு இந்த ஆளு என்று பேச ஆரம்பித்து விட்டார்.

இதனால் தன் பாதையை விட்டு நடிப்புக்கு வந்தது தவறு என்றுணர்ந்து மறுபடியும் வேண்டாம் என்று கூற, ஒருவழியாக சம்மதிக்க வைத்து பின் நடிப்பு சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தனர். கும்கி படத்தில் மலைவாழ் மக்களின் தலைவனாக, ஹீரோயின் அப்பாவாக மாதையன் கதாபாத்திரத்தை கனகச்சிதமாக நடித்துப் பெயர் பெற்றார் ஜோ மல்லூரி. இப்படித்தான் இவரது சினிமா பயணம் ஆரம்பமானது.

தொடர்ந்து ரம்மி, ஜில்லா, அஞ்சான், இரும்புக் குதிரை, காக்கா முட்டை, திருநாள், பத்துதல எனப் பல படங்களில் ஜோ மல்லூரி தந்தையாகவும், வில்லனாகவும், குணச்சித்தர நடிகராகவும் நடித்து தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.