ரவுடிகள் பேருக்கு கொடுத்த அடைமொழி கொடுத்த இயக்குநர்.. திருப்பாச்சி பட வில்லன்கள் உருவான கதை

இயக்குநர் பேரரசு படங்கள் என்றாலே பக்கா கமர்ஷியல் படங்களாகத் தான் இருக்கும். 2005-ல் தனது முதல் படமான திருப்பாச்சி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் முதல் படத்திலேயே தளபதி விஜய்க்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தார். தொடர்ந்து ஊர்ப் பெயர்களையே தலைப்பாக வைத்து படங்களை இயக்கினார்.

அதில் குறிப்பாக சிவகாசி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, தர்மபுரி, பழனி, திருத்தணி, திகார் போன்ற படங்களை இயக்கினார். கேப்டன் விஜயகாந்த் முதல் சின்னத்தளபதி பரத் வரை மசாலா படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டவர் இயக்குநர் பேரரசு.

அவரது முதல் படமான திருப்பாச்சியில் வில்லன்கள் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. காரணம் வில்லன்களின் பெயர்கள். சனியன் சகடை, பட்டாசு பாலு, பான்பராக் ரவி என மூன்று மொரட்டு வில்லன்களுடன் விஜய்யை மோத விட்டிருப்பார். இந்தப் பெயர்கள் எல்லாம் அவர் எப்படி எடுத்தார் தெரியுமா? திருப்பாச்சி படம் உருவான காலகட்டத்தில் தமிழகத்தில் ரவுடிகளின் பெயர் அடைமொழியுடனே கூறப்பட்டு வந்தது.

மூஞ்சி முகரையைப் பாரு.. விட்டா வேட்டிக்குள்ள.. எதிர்நீச்சல் மாரிமுத்துவை பிரபலப்படுத்திய அந்த ஒரு சீன்..

முட்டை சேகர், வெட்டு வெங்கட் என செய்தித்தாள்களில் ரவுடிகளின் பெயர்கள் இடம்பெற்றதைக் கவனித்தவர் தனது படத்தின் வில்லன்களுக்கும் இது போன்ற பெயர்களை வைத்தால் மக்கள் மத்தியில் எளிதாகச் சென்று சேரும் என எண்ணி மேற்கண்ட பெயர்களை வைத்துள்ளார்.

இதில் பட்டாசு பாலுவாக நடிகர் பசுபதி மிரட்டியிருப்பார். இந்த பாலு பேசமாட்டான்.. பட்டாசுதான் பேசும் என ஹீரோ ரேஞ்சுக்கு பஞ்ச் வசனம் பேசி ஓப்பனிங் கொடுப்பார். அதேபோல் கோட்டா சீனிவாச ராவ் சனியன் சகடை கதாபாத்திரம். இந்தப் பெயர் நானா வச்சுகிட்டது இல்லை. மக்கள் எனக்கு கொடுத்தது என்று இவரும் பஞ்ச் வசனம் பேசி அதகளப்படுத்தியிருப்பார்.

கடைசியாக பான்பராக் ரவி. இதில் ஆர்யன் வில்லத்தனத்தில் விளையாடி இருப்பார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கச்சிதமாகத் தேர்வு செய்து அவர்களுக்கு எற்றாற் போல் மாடுலேஷனை உருவாக்கி திருப்பாச்சியில் விளையாட விட்டிருப்பார் இயக்குநர் பேரரசு.

திருப்பாச்சி திரைப்படம் வசூல் ரீதியா பெரும் பெற்றது. மேலும் விஜய்க்கு கில்லி, திருப்பாச்சி, சிவகாசி என ஹாட்ரிக் வெற்றியைத் தேடிக் கொடுத்தது.