கோட் 2nd சிங்கிள் – பவதாரிணியின் நிஜ குரலுக்காக காத்திருந்த யுவன்… ரெக்கார்டிங் சமயத்தில் வந்த சோக செய்தி..

பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் விஜய் பிறந்தநாள் சிறப்பாக நடந்திருந்தது. அதிலும் அவரது நடிப்பில் அடுத்து உருவாகி வரும் கோட் திரைப்படம் தொடர்பாக நிறைய அப்டேட்களும் வெளியான வண்ணம் இருந்தது. கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்த விஜய்,அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், விஜய்யுடன் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஸ்னேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சைன்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

வெங்கட் பிரபு – யுவன் கூட்டணி எப்போதுமே தாறுமாறாக இருக்கும் சூழலில், கோட் படத்திலும் நிச்சயம் ஒரு பெரிய மேஜிக் நடந்திருக்கும் என்றே தெரிகிறது. அந்த வகையில், கோட் திரைப்படத்தின் முதல் சிங்கிளான விசில் போடு, ஐபிஎல் போட்டிக்கு நடுவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட்டடித்திருந்தது.

இதனால், கோட் படத்தின் அடுத்த பாடல்களுக்கும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்தனர். அப்படி இருக்கையில், ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் சில முக்கிய அப்டேட்களையும் வெளியிட்டிருந்தது. சின்ன சின்ன கண்கள் என்ற இரண்டாவது சிங்கிள் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருந்தது.

மறைந்த பாடகியும் யுவன் ஷங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி குரலை AI மூலமாக தயார் செய்து அவருடன் நடிகர் விஜய்யும் இந்த பாடலை பாடி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றும் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்படி கோட் படத்தின் பாடல்கள் மற்றும் வீடியோ அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் ரிலீஸ் தேதியான செப்டம்பர் 5-ஐ எதிர்நோக்கி காக்க வைத்துள்ளது.

அப்படி இருக்கையில், 2 வது சிங்கிளான சின்ன சின்ன கண்கள் பாடலில் பவதாரிணி குரலை AI மூலம் பயன்படுத்திய பின்னணி, பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. இது தொடர்பாக, யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட பதிவின் படி, இந்த பாடலை பெங்களூரில் இருந்து கம்போஸ் செய்து கொண்டிருந்த போது யுவன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் பவதாரிணியை பாட வைக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

அப்போது அவர் மருத்துவமனையில் இருந்ததால் வெளியே வந்த பின் பாட வைக்கலாம் என நினைத்த போது, அடுத்த ஒரு மணி நேரத்தில் பவதாரிணி மரணம் அடைந்த தகவல் வந்து சேர்ந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக உடைந்து போன யுவன், இப்படி AI மூலம் பவதாரிணி குரலை இந்த பாடலுக்கு பயன்படுத்துவேன் என ஒரு காலத்திலும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சின்ன சின்ன கண்கள் பாடல் ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்து வர அதன் பின்னணி பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.