மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த சரத்குமார்.. குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பு

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் பிரபல அரசியல்வாதியாகவும் திகழ்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் தனது கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.வுடன் இணைத்து தானும் பா.ஜ.க.வில் இணைந்து கொண்டார்.

மேலும் விருதுநகர் தொகுதியில் தனது மனைவி ராதிகா சரத்குமாரை போட்டியிட வைத்தார். இருப்பினும் ராதிகா சரத்குமார் தோல்வி அடைந்தார். இந்நிலையில் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாரும் பிரபல நடிகையாகத் திகழ்கிறார். லண்டனில் சினிமா சார்ந்த படிப்பினை முடித்து விட்டு தமிழில் விக்னேஷ்-சிவன் இயக்கிய போடா-போடி படம் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எதிர்மறைக் கதாபாத்திரங்களில் குறிப்பாக சண்டைக் கோழி 2, சர்கார் போன்ற படங்களில் தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இயக்குநர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் இவருக்கு நல்ல அடையாளத்தினைக் கொடுத்தது. தொடர்ந்து நடித்து வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

எழுதமாட்டேன் என அடம்பிடித்த வைரமுத்து.. பிடிவாதத்துடன் எழுத வைத்த இசையமைப்பாளர்.. உருவாகிய தேசிய விருதுப் பாடல்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சத்சேவை திருமணம் வருகிற ஜுலை 2-ல் செய்து கொள்ள உள்ளார். மணமகன் நிக்கோலாய் சத்சே ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர். மேலும் அவருக்கு ஓர் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று சரத்குமார் தனது குடும்பத்துடன் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சென்று தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 3-வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மோடிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார். மேலும் தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார்.

ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல், விஜய், அதேபோல் தெலுங்கு, பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் உள்ளிட்ட பலருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரலட்சுமி பீனிக்ஸ், ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை விரைவில் திரைக்கு வர உள்ளன.