மாணவனை ஓயாது துளைத்தெடுக்கும் செல்போன் அழைப்பு.. அமரன் படத்தால் வந்த சிக்கல்

இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி வீர மரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த்-ன் வாழ்க்கை வரலாற்றினைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அமரன். உலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் ராஜ்குமார்…

Amaran Mobile Scene

இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி வீர மரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த்-ன் வாழ்க்கை வரலாற்றினைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அமரன். உலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தீபாவளி அன்று வெளியான இப்படத்திற்கு ஆதரவு அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு டாக்டர், டான் ஆகிய படங்களைத் தொடர்ந்து 3-வது 100 படம் என்ற பெருமையைப் பெற்றது. தற்போது வரை அமரன் திரைப்படம் சுமார் 170 கோடியை தாண்டி வசூல் சாதனை புரிந்திருக்கிறது. படத்தில் இந்திய ராணுவம் தொடர்பான காட்சிகள் அதிகம் இருப்பதால் இளைஞர்களை இந்தப்படம் வெகுவாகக் கவர்ந்திழுத்து வருகிறது. மேலும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலையும் அமரன் படம் ஏற்படுத்தியிருக்கிறது.

அமரன் படம் ரிலீஸாக காரணமே கமல் சார் தான்… இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்வு…

படத்தில் சாய்பல்லவியின் நடிப்பு பெரிதும் பேசப்படுகிறது. மேஜர் முகுந்த் மனைவியான இந்து ரபேக்கா கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் மனைவியாக சாய் பல்லவி வரும் காட்சிகள் சிறந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது. மேலும் கிளைமேக்ஸ் காட்சியும் கண்கலங்க வைக்கிறது. இந்நிலையில் படத்தில் சாய்பல்லவி தன்னுடைய செல்போன் எண் என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெறும். அந்தக் காட்சியில் 10 எண்களும் இருக்கும். படத்தினைப் பார்த்த ரசிகர்கள் பலர் உண்மையாகவே அந்த செல்போன் எண்ணுக்குப் போன் செய்திருக்கின்றனர்.

சாய்பல்லவி எழுதிக் கொடுக்கும் அந்த செல்போன் எண் சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவருடையதாம். சாய்பல்லவி எண் என நினைத்து ரசிகர்கள் தினமும் அந்த மாணவருக்குப் போன் செய்து சாய் பல்லவி எங்கே என விசாரித்திருக்கின்றனர். அதன்பின் அந்த மாணவர் இது அவர் எண் அல்ல என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இதேபோல் தினமும் மாணவருக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கிறது. இதனால் அம்மாணவர் படக்குழுவினை இந்த விவகாரத்திற்கு விளக்கம் கொடுத்து சரி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.