2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த நான்கு கிரகங்களின் இடப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. 2025ஆம் ஆண்டில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளில் பிறந்தவர்களுக்கு யாருக்கெல்லாம் அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப்போகிறது என்று பார்க்கலாம்.
சிம்மம்:
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டில் கண்டச்சனியாக பயணம் செய்யும் சனி பகவான் அஷ்டம சனியாக எட்டாம் வீட்டில் அமரப்போகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பண விசயங்களில் கவனம் தேவைப்படும். தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருபகவான் ஆண்டின் மத்தியில் லாப குருவாக இடப்பெயர்ச்சி அடையப்போவதால் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். வருமானம் பல வழிகளிலும் தேடி வரும். ஆண்டின் இறுதியில் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். 7ஆம் வீட்டிற்கு வரப்போகும் ராகுவினால் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். கேதுவினால் மன குழப்பம் ஏற்படும் கவனம் தேவை.
கன்னி:
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு சாதகமான பலனை தரப்போவதில்லை. காரணம் 6ஆம் இடத்தில் அமர்ந்து சகாயம் செய்து வந்த சனிபகவான் இனி கண்டச்சனியாக பயணம் செய்யப்போகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். 10ஆம் வீட்டிற்கு வரப்போகும் குருபகவான் வேலை தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஆண்டின் இறுதியில் அதிசாரமாக லாப ஸ்தானத்திற்கு வரப்போவது சிறப்பு. ஜென்ம கேது விரைய ஸ்தானத்திற்கு செல்வது சிறப்பு. அதே நேரத்தில் 6ஆம் வீட்டிற்கு வரப்போகும் ராகு உடல்நிலையில் சில சோதனைகளைத் தருவார் கவனம் தேவை.
துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டில் சனிபகவான் அள்ளித்தரப்போகிறார். ஆறாம் வீட்டில் வந்து அமரப்போகும் சனிபகவான் அருள்மழையால் பணமழை பொழியப்போகிறது. எதிரிகள் தொல்லை ஒழியும், நோய், கடன் பிரச்சினை முடிவிற்கு வரப்போகிறது. குருபகவான் இடப்பெயர்ச்சியால் வெற்றிகள் தேடி வரப்போகிறது. குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. திருமண சுப காரியங்கள் கைகூடி வரப்போகிறது. ஆண்டு இறுதியில் தொழில் ஸ்தானத்திற்கு வரப்போகும் குருவினால் வேலையில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ராகு, கேதுவும் சாதகமான இடத்தில் பயணம் செய்யப்போவதால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமையப்போகிறது.
விருச்சிகம்:
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு, சனிபகவானின் பயணம் இனி சாதகமான இடத்திற்கு வரப்போகிறது. ஆட்டி வைத்த அர்த்தாஷ்டம சனி 5ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால் பூர்வ ஜென்ம புண்ணியங்கள் தேடி வரப்போகிறது. குரு பகவானின் பயணமும் பார்வையும் ஆண்டு முழுவதும் சாதனமாக இடத்தில் உள்ளதால் உங்களின் வருமானத்திற்கு குறைவிருக்காது பணமழை பொழியப்போகிறது. ராகு நான்காம் வீட்டிற்கும் கேது பத்தாம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போவதால் வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். செல்வ செழிப்பு நிறைந்த ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமையப்போகிறது.