வீடு கட்ட பணம், பொருள், இடம் மட்டும் போதாது. வீடு கட்டும் முயற்சி வெற்றியடையவும், கட்டிய வீட்டில் நிம்மதியாய் வாழவும் வாஸ்து முக்கிய பங்கு வகிக்கிறது. மனையின் அமைப்பு, குடும்பத்தலைவரின் ராசியின்படி எந்த திசையில் வாசல் வைப்பது?! அறைகளின் எண்ணிக்கை, அறைகளின் அமைப்பு எப்படி இருக்கவேண்டுமென்பதை வாஸ்து நிபுணர்களை ஆலோசித்து கட்டுவது சிறப்பான பலன்களை தரும்.
வாஸ்துப்படி எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் தலைவாசல் வைத்து வீடு கட்டினால் நன்மை தரும் என பார்க்கலாமா?!
மேஷம்; இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு திசையை நோக்கி தலைவாசல் வைத்து வீடு கட்டுவது சிறந்த பலனை தரும். அப்படி வாசல் அமைக்கும்போது தென்மேற்கு பகுதியில் அமைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கும்பம்: மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கும் மேற்கு திசை பொறுத்தமான திசையாகும். அவர்களும் வீட்டின் தலை வாசலை மேற்கு திசையில் அமைப்பது வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏராளமான நன்மைகளை பெற்று தரும்.
சிம்மம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் வீட்டின் வாசலை கிழக்கு பக்கம் வைக்கலாம். அப்படி வீட்டின் முகப்பு அமைந்தால் செல்வம் நிலைத்திருக்கும். பண பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய நிலை வராமல் செல்வம் குறைபடாமல் கைவசம் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். வீட்டின் வாசலை கிழக்கு திசை பார்த்து அமைக்க முடியாத சூழலில் மேற்கு திசையில் வாசல் அமைக்கலாம். இதேமாதிரி துலாம், கன்னி ராசியில் பிறந்தவர்களும் கிழக்கு திசை நோக்கி வாசலை நிறுவலாம். அப்படி அமைக்கும் பட்சத்தில் வீட்டில் செல்வம் குறைவில்லாமல் இருக்கும்.
தனுசு: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு திசை பலன்களை தருவதாக அமையும். இந்த திசை நோக்கி வீட்டு வாசலை அமைப்பதால் நன்மைகள் கிட்டும். எனினும் வாசலை அமைக்கும்போது அது தென்மேற்கு திசையில் அதிக அளவு ஆக்கிரமித்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
மகரம், விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களும் தெற்கு திசை பார்த்து வீட்டு வாசலை அமைக்கலாம். அப்படி அமைப்பது செல்வாக்கையும், மதிப்பையும் பெற்றுத்தரும்.
மிதுனம், ரிஷபம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு வடக்கு பார்த்த திசை பலன் தருவதாக அமையும். அந்த திசையில் வீட்டு வாசலை அமைக்கலாம். கடகம் ராசிக்காரர்களும் வடக்கு திசை சாதகமான திசையாகும்.
இவ்வாறு அவரவர் ராசிப்படி தலைவாசல் அமைத்தால் பொருள், கல்வி, உடல் நலம் என அனைத்திலும் குறைவின்றி இல்லத்தில் நிம்மதி தங்கி இருக்கும்