மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’திருடா திருடா’ என்ற திரைப்படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தவர் ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஆனந்த் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். மூன்று சகோதரர்களுடன் பிறந்த ஆனந்த் தான் கடைசி தம்பி. இதனால் அவரை வீட்டில் உள்ளவர்கள் மிகவும் செல்லமாக வளர்த்து வந்ததாக தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய பரத் அருண் இவரது சகோதரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயதிலேயே ஆனந்திற்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ’வண்ண கனவுகள்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. பாலச்சந்தரின் தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கேரக்டர் கிடைத்த நிலையில் அதன் பின்னர் சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார்.
குறிப்பாக விஜயகாந்த் நடித்த ’பூந்தோட்ட காவல்காரன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார் ஆனந்த். இந்த படத்தில் கிடைத்த புகழின் மூலம் அதன் பிறகு சில வில்லத்தனமான கேரக்டர்களும் அவரை தேடி வந்தது.
அண்ணாநகர் முதல் தெரு, அபூர்வ சகோதரர்கள், அதிசய மனிதன், அஞ்சலி, என் பொட்டுக்கு சொந்தக்காரன், ஊர் மரியாதை, தலைவாசல், முதல் குரல், சின்ன மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்தார். ஆனால், ஆனந்த்திற்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’திருடா திருடா’ தான். பிரசாந்த் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் நாயகர்களாக நடித்த இந்த படத்தின் நாயகிகளாக ஹீரா மற்றும் அனு அகர்வால் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதையடுத்து ஆனந்துக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் அவருக்கு தெலுங்கு திரை உலகில் தான் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. ஒரு கட்டத்தில் அவர் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த போது ஆனந்த், ஒரு சில தமிழ் திரைப்படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்து வந்தார்.
2002 ஆம் ஆண்டு ’ராஜ்ஜியம்’ என்ற திரைப்படத்திலும், 2003 ஆம் ஆண்டு ’எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படத்திலும், நடித்தார். அதன் பிறகு அவர் 2009 ஆம் ஆண்டு தான் ‘முத்திரை’ என்ற படத்தில் நடித்தார். தெலுங்கு மலையாள திரை உலகில் பிஸியாக இருந்த ஆனந்த் தற்போது மீண்டும் தமிழ் திரை உலகில் ரீஎண்ட்ரி ஆகி உள்ளார். ’பாயும் ஒளி நீ எனக்கு’ ’கொலை’ ஆகிய இரண்டு படங்களில் இந்த ஆண்டு அவர் நடித்துள்ளார்.
திரையுலகில் மட்டுமின்றி சின்னத்திரையுலகிலும் அவர் சில தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான பெயரைச் சொல்லவா, சிகரம், சூலம், இதயம், அன்பே வா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். அதேபோல் ஒரு சில மலையாள சீரியல்களிலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஆனந்த் 2009 ஆம் ஆண்டு பூர்ணிமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.