நாம் பிறரோடு பேசும்போது ஏதாவது சம்பவங்களை விவரிக்க நேரிடுகையில் அதற்கு உதாரணமாக ஏதாவது வசனத்தையோ அல்லது பழமொழிகளையோ கூறுவது உண்டு. கிராமங்களில் பழமொழிகளும் சொலவடைகளும் அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் பழமொழிகளை பயன்படுத்தும் பலருக்கு அதன் உண்மையான பொருள் என்ன என்று தெரிவது குறைவுதான்.
பழமொழியில் சொல்லப்பட்டிருக்கும் அர்த்தம் நாளடைவில் மருவி வேறொரு பொருள் கொண்டதாக மாறி இருக்கும்.
அப்படி மருவிய சில பழமொழிகளின் உண்மையான அர்த்தம் என்ன என பார்க்கலாம்.
பழமொழி 1: பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ
இந்த பழமொழியை படிக்கும் பொழுது பந்தி அதாவது உணவு பரிமாறப்பட்ட விருந்து என்றால் அதற்கு நாம் முந்தி சென்று உணவை அருந்தி விட வேண்டும் அதுவே போர்க்களத்தில் போர் புரிய வேண்டும் என்றால் நாம் பின்வாங்கி விட வேண்டும் என்று பொருள் என நினைத்துக் கொள்கிறோம் .
ஆனால் உண்மையான பழமொழி பந்திக்கு முந்தும் கை படைக்கு பிந்தும் கை.

போர் புரியும் பொழுது வலது கையானது வாள், அம்பு இவற்றை பயன்படுத்தும் பொழுது கை பின்னால் போகும். அதுவே உணவு அருந்தும் பொழுது அந்த வலது கையானது முன்னால் வரும் இதைத்தான் புலவர்கள் பந்திக்கு முந்தும் கை படைக்கு பிந்தும் கையென்று கூறியுள்ளனர்.
பழமொழி 2: களவும் கத்து மற
இந்த பழமொழியில் ஒருவர் வாழ்நாளில் அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் அதாவது திருடுவதற்கு கூட கற்று பின் மறந்து விட வேண்டும். நாம் கற்றதில் நல்லன இல்லாத கெட்டதை மறத்தல் வேண்டும் என்று பொருள் என நாம் நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால் உண்மையான பழமொழி களவும் கத்தும் மற.

களவு என்றால் திருடுதல் கத்து என்றால் பொய். திருடுவதையும் பொய் கூறுவதையும் மறந்து விட வேண்டும் என்பதே இந்த பழமொழியின் உண்மையான பொருளாகும்.
பழமொழி 3: ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்
இந்த பழமொழியில் ஆயிரம் பேரையாவது கொன்றால் தான் ஒருத்தர் பாதி மருத்துவர் ஆகலாம் என்று பொருள் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது.

ஆனால் உண்மையான பழமொழி ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
வைத்தியம் பார்ப்பதற்காக குறைந்தது ஆயிரம் மூலிகைகளின் வேர்களைக் கொண்டவர் தான் பாதி வைத்தியர் ஆவது ஆக முடியும் என்பது தான் உண்மையான பழமொழியின் பொருளாகும்.
நான் சௌமியா. எப்பொழுதும் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளாக டிஜிட்டல் மீடியாவில் எழுதி வருகிறேன். தற்போது தமிழ் மினிட்ஸ் ஊடகத்திற்காக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை முறை, சமையல், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

