தமிழ் சினிமாவில் கலக்கிய ஒய்ஜி மகேந்திரனின் தந்தை.. பையனுக்கே ஒரு காலத்தில் டஃப் கொடுத்த நடிகர்!

பிரபல குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் ஒய்ஜி மகேந்திரன் பற்றியும் அவரது நடிப்புத் திறன் பற்றிய தகவலும் பலர் அறிந்ததே. மேலும் அவர் ஏராளமான நாடகங்களிலும் நடித்துள்ளார். ஆனால், அவருடைய தந்தையும் ஒரு நாடக மற்றும் திரைப்பட நடிகர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. ஒய்ஜி மகேந்திரனின் தந்தை ஒய்ஜி பார்த்தசாரதி. கடந்த 1917 ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறு வயதிலேயே நாடகங்களில் நடிப்பதிலும் நாடகங்கள் நடத்துவதிலும் ஆர்வமாக இருந்தார்

இவர் சொந்தமாக ஒரு நாடக கம்பெனியை தொடங்கி இருந்தார். அதன் மூலம் பல நாடகங்களை அரங்கேற்றவும் செய்திருந்தார். இவரது நெருங்கிய உறவினர் தான் நடிகை வைஜெயந்திமாலா. நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்த ஒய்ஜி பார்த்தசாரதிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக அவர் ஜெயகாந்தன் கதையில் பீம்சிங் இயக்கத்தில் உருவான ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் நடித்த வெங்கு மாமா கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

முதல் படத்தின் மூலமே கவனம் ஈர்த்த ஒய்ஜி பார்த்தசாரதி, அதன் பிறகு கே பாலச்சந்தர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த ’மன்மதலீலை’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் நாயகி ஆலமின் தந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் விஜயகுமார் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்த ’சங்கர் சலீம் சைமன்’ என்ற திரைப்படத்தில் ஒய்ஜி பார்த்தசாரதி, வேதாச்சலம் என்ற கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் அவரது மகன் ஒய்ஜி மகேந்திரனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ygp1

இதனை அடுத்து ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறார்’ ’இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ ஆகிய படங்களில் நடித்தார். இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தில் ஸ்ரீ பிரியாவின் தந்தையாக நடித்து அசத்தி இருப்பார். பார்த்தசாரதியின் நடிப்பை பார்த்து இயக்குனர் ஸ்ரீதரே ஆச்சரியப்பட்டு அவரை வாழ்த்தியதாகவும் கூறப்படுவது உண்டு.

இதன் பிறகு  கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ’அடுக்கு மல்லி’ என்ற திரைப்படத்தில் நடித்தார். விஜயகுமார், சுஜாதா நடித்த இந்த படத்தில்  ஒய்.ஜி. மகேந்திரனும் நடித்திருந்தார். அதன் பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான திரில்லர் திரைப்படமான ’டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்தார்.  இதனை அடுத்து ரஜினியுடன் பாயும் புலி படத்தில் நடித்த ஒய்ஜி பார்த்தசாரதி இரவு பூக்கள் என்ற திரைப்படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

1986 ஆம் ஆண்டு இரவு பூக்கள் வெளியான நிலையில் அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. அந்த காலகட்டத்தில் ஒய்ஜி மகேந்திரன் தமிழ் திரை உலகில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் அவர் தன் வயது காரணமாக திரையுலகிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews