விசுவின் சகோதரர் கிஷ்மு பத்தி தெரியுமா? பெரிய ஆளா வந்துருக்க வேண்டியவரு.. 46 வயதிலேயே நடந்த சோகம்!

இந்திய சினிமாவிலேயே உடன் பிறந்த நடிகர் – நடிகைகள் என ஏராளம் பேர் இருக்கின்றனர். அந்த வகையில் நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் கலக்கிய விசுவின் சகோதரர் கிஷ்மு பற்றி தற்போது பார்க்கலாம். பல படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்த விசு, கண்மணி பூங்கா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

அதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்திருந்த விசு, இந்த படத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் என இரண்டிலும் பட்டையை கிளப்பி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக மணல் கயிறு என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் தான் விசுவின் சகோதரர் கிஷ்மு அறிமுகமானார். கமலக்கண்ணன் என்ற கேரக்டரில் அட்டகாசமாக கிஷ்மு நடித்ததையடுத்து அவர் விசுவின் அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக நடிக்க தொடங்கினார்

விசு இயக்கத்தில் உருவான டௌரி கல்யாணம் என்ற படத்தில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் இந்த படத்தில் கிஷ்மு ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்தார். சிதம்பர ரகசியம் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து கலக்கினார். தொடர்ந்து கார்த்திக் ஹீரோவாக நடித்த அவள் சுமங்கலி தான் என்ற திரைப்படத்தை விசு இயக்கிய நிலையில் இந்த படத்தில் கிஷ்மு நடித்திருப்பார்.

அப்படி ஒரு சூழலில், கிஷ்முவுக்கு மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கி தந்த படம் என்றால் சம்சாரம் அது மின்சாரம் என்ற படம் தான். ஆல்பர்ட் பெர்னாண்டஸ் என்ற கேரக்டரில் கலக்கலாக நடித்திருந்த கிஷ்மு, விசுவின் சம்மந்தியாக நடித்திருப்பார். தன்னுடைய மருமகள் வீட்டை விட்டு சென்று விட்டார் என்பதை அறிந்ததும் அவரை திரும்பவும் வீட்டுக்கு கொண்டு வர மனோரமாவுடன் சேர்ந்து அவர் நடத்தும் நாடகம் அட்டகாசமாக அமைந்திருக்கும்.

இதன் பின்னர் விஜயகாந்த், கார்த்திக் நடிப்பில் ஆபாவாணன் தயாரிப்பில் அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவான ஊமை விழிகள் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் கோதண்டராமன் என்ற முக்கிய கேரக்டரில் நடித்தார். திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தில் இவருக்கு மிக அருமையான ஒரு கேரக்டர் வழங்கப்பட்டது. சத்தியமூர்த்தி என்ற அந்த கேரக்டர் இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்காமல் நினைவில் இருக்கிறது.

மேலும் கலைஞர் கதை, வசனம் எழுதிய ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். மாப்பிள்ளை சார், தாய்மேல் ஆணை, ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் போன்ற படங்களில் நடித்த கிஷ்மு மீண்டும் விசு இயக்கத்தில் உருவான வரவு நல்ல உறவு திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஒரு குடிகாரராகவும் அதே நேரத்தில் வீட்டில் உள்ளவர்களை யாரும் நம்ப கூடாது என்ற கருத்தை சொல்லும் கேரக்டரிலும் நடித்திருந்தார்.

உரிமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தில் கிஷ்மு நடித்திருந்த நிலையில், இந்த படம் தான் அவரது கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் கிஷ்மு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக 1993 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி காலமானார். அப்போது அவருக்கு வெறும் 46 வயது தான். விசுவின் பல படங்களிலும்  மற்றவர்களின் இயக்கத்தில் உருவான சில படங்களிலும் நடித்து பெரும் சாதனை செய்திருக்க வேண்டியவர். ஆனால் அவர் இளம் வயதிலேயே உயிரிழந்தது விசுவுக்கு மட்டுமின்றி திரை உலகிற்கே பெரிய இழப்பாக கருதப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...