எம்ஜிஆர் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்.. கண்ணால் கலக்கிய நடிகரின் வாழ்வில் நடந்த சோகம்

தமிழ் திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் கண்ணன். இவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே கலைத்துறை, படிப்பு ஆகிய இரண்டிலும் வல்லவராக இருந்தார். நண்பர்களுடன் திரைப்படம் மற்றும் நாடகம் பார்ப்பது, அதே நேரத்தில் பெற்றோருக்கு கட்டுப்பட்டு கல்வி கற்பது என இரண்டையும் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தான் எம்.ஜி.ஆரை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார் கண்ணன். எம்.ஜி.ஆரின் நடிப்பு, கலைஞரின் வசனம் ஆகியவற்றை தனது நண்பர்களுடன் நடித்துக் காட்டுவார். இதனைத் தொடர்ந்து படிப்பு முடித்தவுடன் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்தாலும் அவருக்கு நாடகத்தின் மீது இருந்த ஆர்வம் குறையவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து சில நாடகங்களில் நடித்தார்.

அப்படி இருக்கையில் தியேட்டர் ஆபரேட்டர் ஒருவரின் நட்பு கிடைத்தது. அந்த ஆபரேட்டர் எம்ஜிஆர் நடிக்கும் ’மதுரை வீரன்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். நீங்கள் சென்னை சென்று முயற்சி செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.
உடனே தனியார் நிறுவனத்தின் வேலையை விட்டுவிட்டு சென்னை வந்த கண்ணன், எஸ்எஸ்ஆர் அவர்களை முதலில் சந்தித்தார். அவர்தான் எம்ஜிஆர் முகவரி மற்றும் மதுரை வீரன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் முகவரியை கொடுத்தார்.

மதுரை வீரன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் முகவரியில் சென்று மணிக்கணக்காக கண்ணன் காத்திருந்தார். அவரை கவனித்த எம்ஜிஆர் அந்த இளைஞர் ரொம்ப நேரமாக வெளியில் இருக்கிறார், அவர் யார் என்று விசாரித்து உள்ளே அழைத்து வாருங்கள் என்று கூறினார்.

இதனை அடுத்து தான் கண்ணன் எம்ஜிஆரை முதன்முதலில் அங்கு சந்தித்தார். மதுரை வீரன் திரைப்படத்தில் நடிக்க ஆட்கள் தேவை என கேள்விப்பட்டு அருப்புக்கோட்டையில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறியவுடன், இப்போதைக்கு மதுரை வீரன் படத்தில் தேவையான அனைத்து நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இருப்பினும் நீங்கள் இவ்வளவு தூரம் வந்துவிட்டதால், என்னுடைய நண்பர்களில் ஒருவராக நடியுங்கள் என்று எம்ஜிஆர் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அப்போதுதான் அவருடைய ஒரிஜினல் பெயரான ரங்கநாதன் என்ற பெயரை கண்ணன் என்று எம்ஜிஆர் பெயர் மாற்றினார். உன்னுடைய கண்கள் மிகவும் கவர்ச்சியாக உள்ளது, எனவே உனக்கு கண்ணன் என்ற பெயரை சினிமாவுக்காக வைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். கண்ணன் என்ற பெயரில் எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தார். பல திரைப்படங்களில் அவர் போலீஸ், வில்லன், காமெடி என பல வித்தியாசமான வேடத்திலும் நடித்துள்ளார்.

எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கிய போது அவருடைய கட்சியில் இணைந்த ஏராளமான நடிகர்களில் கண்ணனும் ஒருவர். மேலும் அவருக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட எம்ஜிஆர் வாய்ப்பளித்தார். ஆனால் தனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்றும் எனக்கு கொடுத்த வாய்ப்பை எனது நண்பர் சௌந்தர்ராஜனுக்கு கொடுங்கள் என்றும் கூறியிருந்தார். அவர் கூறியபடியே அவருடைய நண்பர் சௌந்தரராஜனுக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் அந்த நண்பர் வெற்றி பெற்று, அதன்பின் அமைச்சரானார்.

தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் அவர் மேடை பேச்சுகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது ஒரு மேடையில் எம்ஜிஆரின் புகழைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். எம்ஜிஆரை புகழ்ந்து பேசி கொண்டிருக்கும்போதே உயிர் துறந்தது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. நடிகர் கண்ணன் மறைந்தாலும் அவரது கவர்ச்சியான கண்கள், அசத்தலான நடிப்பு ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...