கம்பீர உருவம், கணீர் குரல்.. எம்ஜிஆர், ரஜினி என அனைவரையும் அசர வைத்த டி.கே.பகவதி!

இன்றைய காலகட்டத்தில் திரை உலகில் காலடி எடுத்து வைக்க வைரல் வீடியோக்கள் தொடங்கி, குறும்படங்கள், நடிப்பு ரீல்ஸ்கள் உள்ளிட்டவை கவனம் பெறும் சூழலில், கடந்த 1950 கள் மற்றும் 60களில் திரையுலகில் அறிமுகமானவர்கள் எல்லோருமே நாடகத்தில் இருந்து வந்தவர்கள் தான். நாடகத்தில் நடிப்பது மட்டுமின்றி நாடக கம்பெனியை நடத்தியவர்கள் கூட திரையுலகில் பிரபலமானார்கள்.

அந்த வகையில் டி.கே பகவதியின் நாடக கம்பெனியில் பல பிரபலங்கள் நடித்த நிலையில் அவர் நாடகங்களை மட்டுமின்றி திரையுலகிலும் மிகப்பெரிய சாதனை செய்தார். கடந்த 1935 ஆம் ஆண்டு ’மேனகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான டி.கே பகவதி, நாடகம், திரைப்படம் என இரண்டிலும் மாறி மாறி நடித்து வந்தார்.

டிகே பகவதி நடிப்பில் மனிதன், இரத்த பாசம், சிவகங்கைச் சீமை, சம்பூர்ண ராமாயணம் உள்ளிட்ட படங்கள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக சம்பூர்வ இராமாயணம் திரைப்படத்தில் அவர் ராவணன் கேரக்டரில் நடித்து அசத்திருப்பார்.

மேலும் எல்லோரும் இந்நாட்டு மன்னர், குலமகள் ராதை, உயிரா மானமா, பணமா பாசமா, நம் நாடு, என் அண்ணன், அனாதை ஆனந்தன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். பெரும்பாலான படங்களில் அவர் நாயகன். நாயகிகளுக்கு தந்தையாக நடித்தார். டி.கே. பகவதியின் சிறப்பம்சமாக அவருடைய கம்பீரமான உருவம், கணீர் குரல் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

சிவாஜி கணேசன் மற்றும் ஜெயலலிதா நடித்த சவாலே சமாளி என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் டி கே பகவதி நடித்திருப்பார். அதே போல் ஆதிபராசக்தி, நீரும் நெருப்பும், சங்கே முழங்கு, வசந்த மாளிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சிவாஜி கணேசன் நடித்த ராஜபார்ட் ரங்கதுரை, சிவகாமியின் செல்வன், வாணி ராணி ஆகிய படங்களில் அவர் அப்பா கேரக்டரில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடித்த ஆறிலிருந்து அறுபது வரை என்ற திரைப்படத்தில் ரஜினியின் முதலாளியாக நடித்திருந்த நிலையில், அதுவே அவரது கடைசி படமாக அமைந்தது.

1935 ஆம் ஆண்டில் இருந்து 1979 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய டிகே பகவதி இன்றைய குணச்சித்திர நடிகர்களுக்கு குருவாக இருந்தவர்.

நடிகர் டி கே பகவதியுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். சங்கரன், முத்துசாமி, சண்முகம். இந்த மூவரில் டி.கே சண்முகம் பல நாடகங்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளனர். டி கே சண்முகம் மற்றும் டி.கே பகவதி ஆகிய இருவரும் இணைந்து சில படங்களிலும் நடித்துள்ளார்கள்.

ராஜராஜ சோழன் நாடகத்தில் டி.கே பகவதியின் நடிப்பை பார்த்து தான் இதை படமாக தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே தயாரிப்பாளர் உமாபதிக்கு வந்தது. அவருடைய வேடத்தை வேறு யாராலும் நடிக்க முடியாது என்று லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.