தவெகவின் முதல் பட்ஜெட்டின் பின்னணியில் ப சிதம்பரம், மான்டெக் சிங் அலுவாலியா.. பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைகள், அனுபவங்களுடன் கூடிய பட்ஜெட்.. ஈகோ பார்க்காமல் நிதியமைச்சர் பல்வேறு தரப்புடன் ஆலோசித்தபின் தயாரித்த பட்ஜெட்.. வருவாயை அதிகரிக்க, செலவை குறைக்க, ஊழல் ஓட்டையை அடைக்க என பல்வேறு முயற்சிகள் இந்த பட்ஜெட்டில் தெரிகிறது.. ஒரே பட்ஜெட்டை அனைத்து மாற்றமும் நடக்காது, ஆனால் மாற்றத்திற்கான அறிகுறி இந்த பட்ஜெட்டில் தெரிகிறது.. தமிழ்நாடு பொருளாதாரத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் நாள், கடனே இல்லாத நாள் வெகுதூரத்தில் இல்லை…

தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலாவது பட்ஜெட், மாநிலத்தின் நிதி நெருக்கடிகளுக்கு இடையே ஒரு சுமுகமான சமநிலையைப் பேண முயற்சிக்கும் அறிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஐந்து ஆண்டு கால ஆட்சியில்…

vijay chidambaram

தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலாவது பட்ஜெட், மாநிலத்தின் நிதி நெருக்கடிகளுக்கு இடையே ஒரு சுமுகமான சமநிலையைப் பேண முயற்சிக்கும் அறிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஐந்து ஆண்டு கால ஆட்சியில் முதலாவது வரவு செலவுத் திட்டம் என்பது எட்டு மாத காலத்திற்கான நிர்வாகச் செலவினங்களை மேற்கொள்ள மட்டுமே பயன்படும் என்பதால், இதன் மூலம் மட்டுமே புதிய அரசின் முழுமையான பாலிசி டைரக்ஷனை மதிப்பிட்டுவிட முடியாது. எனினும், கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல மக்கள் நலத்திட்டங்கள் தொடரப்பட்டிருப்பதும், அதே சமயம் அரசின் வருவாயை உயர்த்தவும் லீக்கேஜ்களைத் தடுக்கவும் திட்டமிட்டிருப்பது ஒரு நேர்மறையான தொடக்கமாகவே கருதப்படுகிறது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த கலைஞர் கனவு இல்லம், இலவச மடிக்கணினி, மகளிர் ஆடு மாடு வழங்கும் திட்டங்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியவை நிறுத்தப்படாமல், ‘வெற்றி வீடு திட்டம்’, ‘வெற்றி லேப்டாப் திட்டம்’ எனப் பெயர் மாற்றப்பட்டுத் தொடரப்படுவது வரவேற்புக்குரியது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பெயரில் இருக்கும் திட்டங்களின் அரசியல் பலனை அந்த குறிப்பிட்ட கட்சி மட்டுமே காலத்திற்கும் அறுவடை செய்வதைத் தவிர்க்கவே பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டாலும், ஏழை எளிய மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகள் தடையின்றித் தொடர்வது தவெக அரசின் நிதானமான அணுகுமுறையைக் காட்டுகிறது.

இந்த பட்ஜெட்டின் மிகவும் முக்கியமான மற்றும் தைரியமான நகர்வாகப் பார்க்கப்படுவது டாஸ்மாக் நிர்வாகத்தில் கொண்டு வரப்படவுள்ள சீர்திருத்தங்கள் ஆகும். கடந்த 20 முதல் 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட திராவிடக் கட்சிகளின் முக்கியப் புள்ளிகளே பெரும்பாலான மதுபான ஆலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 45,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாகக் கிடைத்தாலும், சிஸ்டத்திற்கு வெளியே பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடாகச் சுழன்று கொண்டிருக்கிறது. டாஸ்மாக் சேவைகளைப் தனியார்மயமாக்குவது அல்லது சீரமைப்பது தொடர்பான முடிவுகள், இந்த இரு கட்சிகளின் சட்டவிரோத நிதி ஆதாரங்களை முடக்குவதோடு, அரசுக்கான அதிகாரப்பூர்வ வரியையும் வருவாயையும் கணிசமாக உயர்த்த உதவும்.

அதே நேரத்தில், கல்வித்துறை மற்றும் உட்கட்டமைப்புக்கான மூலதனச் செலவினங்களில் நிதி ஒதுக்கீடு சற்று குறைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்க ஒரு குறையாகும். மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை மற்றும் கடன் சுமையைக் காரணம் காட்டி இந்த வெட்டுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்வி மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளுக்கு அடுத்தடுத்த பட்ஜெட்டுகளில் அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மேலும், தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு 2500 ரூபாய், இலவச சிலிண்டர் போன்ற பாப்புலிஸ்ட் திட்டங்கள் முழுமையாக பட்ஜெட்டில் இடம்பெறாததற்கு, நிதிநிலைமை சீரடைந்த பிறகே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற நியாயமான தற்காப்பு வாதமே முன்வைக்கப்படுகிறது.

மாநிலத்தின் நிதி ஆதாரங்களைப் பெருக்கவும், வருவாய் இழப்புகளைத் தடுக்கவும் மான்டெக் சிங் அலுவாலியா தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது மிக முக்கியப் திருப்பமாகும். பசிதம்பரம் போன்ற மூத்த பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளுடன் இயங்கும் இந்த கமிட்டி, வெறுமனே துவாரங்களை அடைப்பதுடன் நிற்காமல், போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் தனியார்மயமாக்கல் மற்றும் சந்தை சார்ந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவர வழிகோலும். இந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் அரசியல் எதிர்ப்புகளைச் சமாளிக்க, சட்டமன்றத்தில் தவெக அரசு தனது ஆளுமையை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சுருக்கமாகச் சொன்னால், தவெக அரசின் இந்த முதலாவது பட்ஜெட் ஒரு ‘மோசமான பட்ஜெட்’ அல்ல; மாறாக, அகலக் கால் வைக்கப் பயந்து தற்போதைய நிதி நிலையைச் சமாளிக்க முயலும் ஒரு எச்சரிக்கையான பட்ஜெட் ஆகும். எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள 12 மாதங்களுக்கான இரண்டாவது முழுமையான பட்ஜெட்டில்தான், விஜய் அரசின் உண்மையான கொள்கை திசையும், பொருளாதாரச் சீர்திருத்தங்களின் வேகமும் தெளிவாக வெளிப்படும். திராவிடக் கட்சிகளின் கொள்ளைச் சுழற்சியை உடைத்து, நிர்வாகத்தைச் சீரமைக்கும் விஜய்யின் இந்த நிதி அணுகுமுறை அடுத்தகட்டத்தை நோக்கி மாநிலத்தை அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.