மீண்டும் ஒன்று கூடப் போகும் தமிழ்த் திரையுலகம் : இது போராட்டத்துக்கு அல்ல போற்றுவதற்கு..!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் முதல் துணை நடிகர்கள் வரை ஒன்று கூடுவது ஒன்று போராட்டமாக இருக்கலாம் மற்றொன்று கலை நிகழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் இந்த முறை ஒன்று கூடப் போவது பேராட்டத்திற்காக அல்ல. போற்றுவதற்காக. தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தற்போது திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசியல் மட்டுமின்றி திரையுலகிலும் தனது கூர் தீட்டிய வசனங்களால் திராவிடக் கொள்கைகளைப் சினிமா வாயிலாகப் புகுத்தி அறிவொளி ஏற்றியவர் கலைஞர் கருணாநிதி. எனவே அவரது சினிமா பங்களிப்பைப் போற்றும் விதமாகவும், கலைஞரின் நூற்றாண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடிப்புக்கு குட்பை சொல்லப்போகும் பிரபல இயக்குநர் : அதிரடி முடிவுக்கு காரணம் இதான்

இவ்விழாவினை மிக பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பெற்று தற்போது அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் விழா குழு சார்பில் நேரில் சென்று உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரைச் சந்தித்து அழைப்பிதழை அளித்தனர். இவ்விழாவில் இருவரும் கலந்து கொள்வதாக உறுதிஅளித்திருப்பதாக அவர்கள் கூறினர்.

ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டு கலைஞரின் திரைத்துறைச் சாதனைகளை கௌரவிக்கும் பொருட்டு அப்போது  கலைஞர் முதல்வராக இருந்த போது ‘பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா‘ என்று பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது அதே போல் மீண்டும் கலைஞர் நூற்றாண்டு விழாவினையும் கொண்டாட விழாக்குழுவினர் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலைஞர் முன் அஜீத் “எங்களைக் கட்டாயப்படுத்தி விழாவிற்கு வர வழைக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் வருகிறோம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக இணைக்காதீர்கள்’ என்று பேசியிருந்தார். இவரது பேச்சு அப்போது மொத்த அரங்கையே உலுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews