இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரி ஒரு பிரபல நடிகையா?.. விஜய், சூர்யா படத்துலயும் சேர்ந்து நடிச்சிருக்காங்களாமே..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாட்ஷா’ உலக நாயகன் கமல்ஹாசனின் ’சத்யா’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா என்பது பலர் அறிந்ததே. ஆனால் அவருடைய உடன் பிறந்த சகோதரி ஒரு பிரபல நடிகை என்பதும் விஜய், சூர்யா படங்கள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் பலரும் அறியாத உண்மை. அவர்தான் சாந்தி கிருஷ்ணா.

நடிகை சாந்தி கிருஷ்ணா மும்பையில் பிறந்து வளர்ந்தார். மும்பையில் தான் அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை படித்தார். அவருக்கு மூன்று சகோதரர்கள். ஸ்ரீராம், சதீஷ் மற்றும் சுரேஷ்கிருஷ்ணா. இந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ’பன்னீர் பூக்களே’ என்ற தமிழ் திரைப்படத்தில் முதல் முறையாக அவர் நடித்தார். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் அதன் பிறகு அவர் ஒரு சில மலையாள படங்களில் நடித்தார்.

அதன்பின்னர் விஜயகாந்த் நடித்த ’சிவப்பு மல்லி’ என்ற திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் மிகையாகாது. அந்த படத்தில் சந்திரசேகர் ஜோடியாக மிக அருமையாக நடித்திருப்பார். அதன் பிறகு ’சின்ன முள் பெரிய முள்’ என்ற படத்தில் நடித்த சாந்தி கிருஷ்ணா, ’பன்னீர் புஷ்பங்கள்’ என்ற படத்தின் மூலம் தான் பிரபலமானார். சுரேஷ் கதாநாயகனாக அறிமுகமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதன்பிறகு அவர் மலையாளத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். அப்படி இருக்கையில், விசு இயக்கத்தில் உருவான ’மணல் கயிறு’ என்ற படத்தில் எஸ்வி சேகர் ஜோடியாக அவர் நடித்திருப்பார். இதில் அவரது கேரக்டர் பெண்கள் மனதை கவர்ந்து இழுத்திருந்தது. ’மணல் கயிறு’ படத்தில் எஸ்வி சேகரின் ஜோடியாக நடித்த சாந்தி கிருஷ்ணா கமல்ஹாசனின் ’சிம்லா ஸ்பெஷல்’படத்தில் எஸ்வி சேகரின் சகோதரியாக நடித்திருப்பார்.

சிம்லா ஸ்பெஷல் படத்திற்கு பிறகு அன்புள்ள மலரே, ஹேமாவின் காதலர்கள் ஆகிய இரண்டு திரைப்படங்களில் தமிழில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அவர் தனது முழு கவனத்தையும் மலையாளத்தில் தொடங்கினார்.

கடந்த 1991 முதல் 96 ஆம் ஆண்டு வரை பல மலையாள படங்களில் அவர் நடித்தார். இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு 1997 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் ரகுவரன் ஜோடியாக நடித்தார். இதன் பின்னர் அவருக்கு தமிழில் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவர் தமிழில் நடிக்க விரும்பவில்லை. தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் மட்டுமே நடித்தார்.

தற்போது கூட அவர் மலையாளத்தில் பிஸியாக நடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு வெளியான பிரித்விராஜ் – நயன்தாராவின் ’கோல்ட் ’படத்தில் கூட சுபத்ரா என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போதும் தொடர்ந்து சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவதில் முனைப்பு காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...