எஸ்எஸ்ஆர் நடித்த சாரதா.. அறுபதுகளில் ஒரு ‘அந்த 7 நாட்கள்’..!

தனது மனைவி வேறொருவரை காதலித்தவர் என்பதை தெரிந்து கொண்ட கணவன், அவரை காதலித்தவர் உடனே சேர்த்து வைக்கும் கதை அம்சம் கொண்டது தான் ‘அந்த ஏழு நாட்கள்’ என்பதும் பாக்யராஜ் இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

ஆனால் 1960ஆம் ஆண்டுகளிலேயே இதேபோன்ற கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் வந்துள்ளது. அதுதான் ‘சாரதா’ என்ற படம். அந்த படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் 60கள் மற்றும் 70களில் குடும்ப கதைகளை இயக்குவதில் வல்லவர். அவரது படம் என்பது ஒரே ஒரு ஒன்லைனை வைத்து வசனங்கள் மற்றும் திரைக்கதையால் அபாரமாக்கப்பட்டிருக்கும். அப்படி ஒரு படம்தான் ‘சாரதா’.

எஸ்எஸ்ஆர், விஜயகுமாரி, புஷ்பலதா, எம்ஆர் ராதா, எஸ்வி ரங்காராவ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு கேவி மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் கதைப்படி எஸ்எஸ்ஆர் மற்றும் விஜயகுமாரி காதலிப்பார்கள். ஆனால் விஜயகுமாரி அப்பா இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார். அப்பாவின் எதிர்ப்பை மீறி விஜயகுமாரி திருமணம் செய்து கொள்வார்.

saratha1

திருமணம் முடிந்த அதே நாள் மாடிப்படியில் இருந்து எஸ்எஸ்ஆர் தவறி விழுந்து விடுவார். அவர் உயிர் பிழைத்து விட்டாலும் அவரால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது என்றும் தாம்பத்தியத்தில் மீறி ஈடுபட்டால் அவரது உயிருக்கே ஆபத்து என்றும் டாக்டர் எஸ்எஸ்ஆரின் மனைவியிடமும் அம்மாவிடமும் கூறுவார்.

இந்த விஷயம் எஸ்.எஸ்.ஆருக்கு தெரியாது. இதனை அடுத்து மனைவியோடு சேர அவர் முயற்சி செய்து கொண்டிருப்பார். ஆனால் ஏதாவது ஒரு காரணம் கூறி விஜயகுமாரி மறுத்துவிடுவார். திருமணமான புதிதில் இது சாதாரணம் என்று எஸ்எஸ்ஆர் முதலில் நினைப்பார். ஆனால் நாளடைவில் அவருக்கு சந்தேகம் ஏற்படும். அப்போதுதான் தனக்குள்ள குறை குறித்து அவருக்கு தெரியவரும். இதனால் அவர் அதிர்ச்சி அடைவார்.

இந்த நிலையில் விஜயகுமாரியை திருமணம் செய்ய வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே அசோகன் ஆசையை வளர்த்திருப்பார். ஆனால் தனது ஆசை நிறைவேறாமல் இருந்ததால் அவர் வருத்தப்பட்டு கொண்டு இருப்பார். அசோகனின் நண்பரான எஸ்எஸ்ஆர் அதை தெரிந்து கொண்டு புதுவிதமாக யோசிப்பார்.

தன்னால் தனது மனைவிக்கு கஷ்டம் வேண்டாம். அதே நேரத்தில் தனது நண்பர் தனது மனைவியை விரும்பியவர். எனவே இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் என்ன? என்று புரட்சிகரமாக யோசிப்பார்.

saratha

இதனை தன் அம்மாவிடமும் கூறுவார். அவரும் அதற்கு ஒப்புக்கொள்வார். இதனை அடுத்து திருமண ஏற்பாடுகள் நடக்கும். எஸ்எஸ்ஆரின் இந்த முடிவுக்கு விஜயகுமாரி மறுப்பு தெரிவிப்பார். எனக்கு மறுமணம் வேண்டாம் என்று கூறுவார்.

ஆனால் அவரை சமாதானப்படுத்தி அவருக்கு விவாகரத்து அளிப்பார் எஸ்எஸ்ஆர். அதன் பிறகு இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கும். அசோகனும் தனது நண்பரின் மனைவியை எப்படி திருமணம் செய்வது கொள்வது என்ற சங்கடத்தில் இருப்பார். விஜயகுமாரியும் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருப்பார்.

திருமணம் நாளும் வரும், மணமேடையில் அசோகன் மற்றும் விஜயகுமாரி உட்கார்ந்து இருப்பார்கள். அப்போது ஏற்படும் ஒரு திருப்பம் தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

இந்த படம் வெளியாகி 61 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றும் இந்த படத்தின் கதை புரட்சிகரமாக இருக்கும். இந்த படத்தின் சாயலை கொண்டுதான் பின்னாளில் அந்த ஏழு நாட்கள் உள்பட ஒருசில திரைப்படங்கள் வெளியாகியது.

இந்த படத்தை எடுத்து முடித்தவுடன் படம் பார்த்த விநியோகஸ்தர்கள் நம்முடைய கலாச்சாரத்துக்கு ஏற்ற படம் அல்ல இது, எனவே இந்த படம் ஓடாது என்று கூறி விநியோகிஸ்தர்கள் கொடுத்த அட்வான்ஸை திரும்ப வாங்கிக் கொண்டு சென்று விட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன் சொந்தமாகவே தமிழகம் முழுவதும் இந்த படத்தை வெளியிட்டார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பல திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. அதுமட்டுமின்றி இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடைய ‘சிநேகிதி’ நாவலின் சாயலாக இருக்கிறது என்று நாவலாசிரியர் அகிலன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் பெண் எழுத்தாளர் ஜெயலட்சுமி தன்னுடைய சிறுகதையின் தாக்கம்தான் இந்த படம் என வழக்கு தொடர்ந்தார். அகிலன் வழக்கு தோல்வி அடைந்த நிலையில் ஜெயலட்சுமி வழக்கு வெற்றியடைந்தது. அவருக்கு தேவையான நஷ்ட ஈடு மற்றும் அவர் குறிப்பிட்ட காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது.

இருப்பினும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் வசூலை அள்ளியது. 1960களிலேயே புரட்சிகரமான படம் எடுத்த இயக்குனருக்கு கோபாலகிருஷ்ணனுக்கு பாராட்டுகள் குவிந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews