வயிற்றுப் பிழைப்புக்காக மேஜிக் ஷோ நடத்தியவர் இந்திய திரைப்படத்துறையின் தந்தை ஆன வரலாறு – தாதா சாகேப் பால்கே!

சினிமா என்றால் என்னவென்றே தெரியாதவர் வயிற்றுப் பிழைப்புக்காக மேஜிக் ஷோ நடத்தி அதில் கிடைத்த வருவாயை வைத்து வாழ்ந்து பின்னாளில் இந்திய திரைப்படத் துறையின் தந்தையாக விளங்கியவர்தான் தாதா சாகேப் பால்கே.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் 1870-ல் பிறந்த பால்கே ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றவர், பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் வரையும் பணியில் ஈடுபட்டார். மும்பை சர்.ஜே.ஜே. கலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றார். பின்னர் மேஜிக் செய்து தனது வாழ்க்கையை நகர்த்தினார்.

இந்நிலையில் இவரது வீட்டருகே ஒருமுறை இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு சினிமாப் படமாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தைப் பார்த்து பிரமிப்பானவருக்கு தனக்குள் கலைத்தாகம் ஊற்றெடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே சகல வித்தைகளையும் கற்ற பால்கே அடுத்ததாக திரைப்படங்களையும் எடுக்க ஆரம்பித்தார். ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் முடியவில்லை. நடிப்பு என்பது பாவம் என்றிருந்த காலகட்டத்தில் நடிகர்களைப் பிடிக்கவே மிகுந்த சிரமப்பட்டார்.

முக்கியமாக பெண் கலைஞர்களுக்காக இவர் பட்ட பாடு சொல்லி மாளாது. எனவே ஆண் நடிகர்களுக்கு பெண் வேடம் கட்டினார். அவருக்கு நடிப்புப் பயிற்சியை வழங்கினார். பெண் வேடமிட்ட ஆண்களுக்கு பெண்களின் நளினம் வருவதற்காகவே கூந்தல் வளர்ப்பது, சமையலில் ஈடுபடுவது என பயிற்சி கொடுத்தார். இவ்வாறு சின்ன சின்ன படங்கள் எடுத்து பழகிய பின், இவர் இங்கிலாந்துக்கு கப்பலேறி வால்டன் ஸ்டுடியோவில் சினிமா கற்றுக் கொண்டு திரும்பினார்.

வட இந்தியாவிலும் வள்ளலாக விளங்கிய எம்.ஜி.ஆர்.. எல்லைச் சாமிகளுக்கு தோள் கொடுத்த வரலாறு..

இவர் இயக்கிய முதல் படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே அந்த வகையில் முதல் இந்தியத் திரைப்படம் ஒரு குடும்பப் படமே ஆகும்.

தனது ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனி மூலம் பால்கே 75 படங்களை தயாரித்தார். ஆனால் பெரும்பாலானவை மௌனப் படங்களாக அமைந்தன. பின்னர் பேசும் படங்கள் வந்ததும் இவரால் தாக்குபிடிக்க முடியவில்லை; நொடிந்து போனார்.  இவரது மனைவி இவருக்கு உற்ற துணையாக இருந்தார். அவரே பல தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொண்டு வேலை பார்த்தார். பசி வறுமை எல்லாம் வாட்டி எடுத்தன; வீட்டு சாமான்களை அடமானம் வைத்து ஜீவனம் நடத்தினார். வறுமையில் நாசிக்கில் கவனிப்பு இன்றி மறைந்து போனார். இவ்வாறு திரைப்படத்திற்காக அவர் செய்த பணிகளைப் போற்றும் விதமாக அவரை இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்கிறோம்.

இன்று இந்திய சினிமாவில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இவருடைய நினைவாக வழங்கப்படுகிறது. இவ்விருதினைப் பெற்ற தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் சிவாஜி, கே.பாலச்சந்தர், ரஜினிகாந்த் மட்டுமே.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...