தமிழில் நடிச்சது அஞ்சே படங்கள் தான்.. ’சாமுராய்’ அனிதா இப்படி பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா?

பொதுவாக ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து நல்ல பெயர் எடுத்த நடிகர்கள் அல்லது நடிகைகள் திடீரென திரைப்பட துறையை விட்டே ஒதுங்கியது போல தோன்றும். ஆனால், வேறு துறையில் அவர்கள் கலக்கிக் கொண்டிருப்பார்கள் என்பது தான் உண்மை. அந்த வகையில், தமிழில் ஐந்தே திரைப்படங்கள் நடித்த ஒரு நடிகை தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

விக்ரம் நடித்த ’சாமுராய்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தான் அனிதா. இந்த படத்தில் இவரது கேரக்டர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவர் தோன்றி இருந்த பாடல்களும் இன்று வரை பெரிய ஹிட்டாக உள்ளது.

ஆனால் ’சாமுராய்’ படத்தில் முதலில் நடிக்க அனிதா ஒப்பந்தமானாலும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே ’வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற திரைப்படம் வெளியானது. எனவே அனிதா நடித்த முதல் ரிலீஸ் படம் என்றால் அது ’வருஷமெல்லாம் வசந்தம்’ தான். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நாயகனாகவும், அனிதா நாயகியாகவும் நடித்த இந்த படத்தை ரவிசங்கர் என்பவர் இயக்கிருந்தார். சிற்பி இசையில் உருவான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் என்பது அனைவரும் அறிந்ததே.

சாமுராய், வருஷமெல்லாம் வசந்தம் ஆகிய இரண்டு திரைப்படங்களை அடுத்து அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபலமானார். ஒரு சில கன்னட படங்களிலும் இடையில் நடித்தார். இந்த நிலையில் தான் அவருக்கு தமிழில் ’சுக்ரன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படத்தில் ரவி கிருஷ்ணா ஜோடியாக அனிதா நடித்த இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்த படத்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார்.

’சுக்ரன்’ படத்தை அடுத்து அவர் மீண்டும் ஹிந்தி திரை உலகிற்கு சென்று விட்டார். அதன் பிறகு ’நாயகன்’ என்ற தமிழ் படத்திலும் ’மகாராஜா’ என்ற தமிழ் படத்திலும் நடித்தார். மொத்தத்தில் அவர் தமிழில் நடித்தது ஐந்தே ஐந்து படங்கள் என்றாலும் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றில் அதிக திரைப்படங்களில் நடித்தார்.

அதுமட்டுமின்றி அவர் பல ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் அவர் விருந்தினராக சென்றுள்ளார். நடிகை அனிதா தற்போதும் கூட சில தொலைக்காட்சி சீரியல்கள் நடித்து வருகிறார். குறிப்பாக ’நாகின் 6’ என்ற தொடரில் அவர் விசாகா என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அந்த கேரக்டர் அவரது அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று கொடுத்தது. மேலும் சில வெப் தொடர்கள் மற்றும் மியூசிக் வீடியோக்களிலும் அவர் நடித்துள்ளார்

இந்த நிலையில் நடிகை அனிதா கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. 42 வயதாகும் அனிதா, தற்போது கூட பிஸியாக தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் தனக்குரிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...