ஆடித்தள்ளுபடியில் ஆடிப்போவிங்க ஆடி!!! ஆடி அதிரடி தள்ளுபடிக்கான பின்னணி என்ன?

ஆடி மாதம் என்றாலே ஒருபுறம் அம்மனுக்கு வழிபாடுகள், திருவிழாக்கள் என்று கோவில்கள் கலை கட்டும். இன்னொரு புறம் ஆடித்தள்ளுபடி, ஆடி விற்பனை, ஆடி அதிரடி விலை குறைப்பு என கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதும். 50 சதவீதம் வரை தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் என பல விளம்பரங்களை பார்த்திருப்போம். ஆடி வந்த உடனேயே ஜவுளி கடைகளில் மட்டுமின்றி இப்பொழுது வீட்டு உபயோக பொருட்கள், நகை கடைகள் என அனைத்து கடைகளிலும் தள்ளுபடி விற்பனை தொடங்கி விடுகிறார்கள். மக்களும் தள்ளுபடி என்ற விளம்பரங்களை பார்த்தவுடன் கடைகளில் குவிந்து விடுகிறார்கள்.

எதனால் ஆடி மாதத்திற்கு மட்டும் தள்ளுபடி? அப்படி ஆடி மாதத்திற்கு தள்ளுபடி விலையில் தருவோர் மற்ற மாதங்களில் ஏன் தருவதில்லை? உண்மையிலேயே ஆடித்தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்கு லாபகரமானதுதானா? என்பதை பார்ப்போம்.

adi

ஆடி மாதத்திற்கு என்று சில சிறப்புகள் உண்டு. ஆடி மாதத்தில் தான் புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு ஆடிப்பெருக்கு அன்று தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடைபெறும். இது தவிர ஆடி மாதத்தில் புதிதாய் திருமணமான பெண்களை பிறந்த வீட்டினர் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து புத்தாடைகள் எடுத்துக் கொடுத்து ஆடிப் பலகாரம் செய்து ஆடி மாதம் முடிந்ததும் அனுப்பி வைப்பார்கள். இது தவிர ஆடி மாதம் விவசாயிகளுக்கு மிக முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கு ஏற்ப ஆடி மாதம் விவசாயிகள் விதைப்பினை தொடங்குவார்கள். ஆடி மாதம் விதைத்து தையில் அறுவடை செய்து தைத்திருநாள் கொண்டாடுவது தான் நம் தமிழரின் வழக்கம்.

இந்த சிறப்புகளை தவிர ஆடி மாதத்தில் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளோ, சிறப்பான பண்டிகைகளோ எதுவும் இல்லை. இதனால் மக்கள் புத்தாடைகள் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. துணிக்கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருந்தது.

aadi

மேலும் துணிக்கடைகளில் உள்ள பழைய ரக டிசைன்களை விற்று முடித்தால்தான் அடுத்து தொடர்ந்து வரும் தீபாவளி, பொங்கல் ஆகியவற்றிற்கு புது ரக டிசைன்களை விற்பனைக்காக இறக்க முடியும். இதனால் தங்களிடம் உள்ள துணி வகைகளை விற்று தீர்க்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட வியாபார யுக்தி தான் ஆடி தள்ளுபடி. நன்கு கவனித்தால் அனைத்து துணிகளையும் 50 சதவீத தள்ளுபடிக்கு விற்க மாட்டார்கள் ஒரு சில குறிப்பிட்ட துணிகள் மட்டுமே 50 சதவீதம் விற்கப்படும். அவற்றையும் திரும்ப மாற்ற இயலாது என்று கூறிவிடுவார்கள். பிற துணிகள் ஐந்து முதல் பத்து சதவிகித தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் இவை அனைத்தும் அவற்றின் அடக்க விலையை விட கூடுதலாய் இருக்குமே தவிர குறைவாய் விற்க மாட்டார்கள்.

இதனால் வியாபாரம் நலிவுற வேண்டிய ஆடி மாதத்தில் வியாபாரம் அதிகரிக்கும். மேலும் விற்காத பழைய துணிகளையும் விற்றது போலவும் ஆகிவிடும். எனவேதான் ஆடித்தள்ளுபடி என்ற மிகப்பெரிய வியாபார உத்தி கடைபிடிக்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews