25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்த ரஜினி.. 2 நாட்களை திருப்பி கொடுத்த இயக்குனர்.. 175 நாள் ஓடிய குருசிஷ்யன்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களுக்கு குறைந்தது மூன்று மாதங்கள் கால்ஷீட் கொடுப்பார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான தளபதி திரைப்படத்திற்கு ஆறு மாதங்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்ததாக கூறப்பட்டது. அதே சமயம் அவர் ஒரு திரைப்படத்திற்கு வெறும் 25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்த நிலையில் 23 நாட்களில் படத்தை முடித்துவிட்டு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இரண்டு நாட்களை அவரிடம் திருப்பிக் கொடுத்த வரலாறும் உண்டு என்றால் அது குரு சிஷ்யன் படத்திற்கு தான்.

கடந்த 1988ஆம் ஆண்டு குரு சிஷ்யன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினியுடன் பிரபு இரண்டாவது கதாநாயகனாக நடிக்க முடிவு செய்யப்பட்டது. ரஜினிக்கு ஜோடியாக புதுமுகம் கௌதமி நடித்தார். ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்த நடிகை சீதா பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

guru sishyan3

மேலும் இந்த திரைப்படத்தில் பாண்டியன், சோ, ரவிச்சந்திரன், ராதா ரவி, மனோரமா, உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றன. ஐந்தும் சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக ‘கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்’, ‘வா வா வஞ்சி இளமானே’ ஆகிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

இந்த படத்தில் பெரிய அளவில் கதையே இல்லாமல் முழுக்க முழுக்க காமெடி அம்சத்தையே வைத்து இயக்கியிருப்பார் எஸ்.பி முத்துராமன். திரைக்கதை, வசனத்தை பஞ்சு அருணாச்சலம் எழுதினார். சோவின் அரசியல் வசனம், மனோரமாவின் காமெடி ஆகியவை இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது.

ரஜினி மற்றும் பிரபு ஆகிய இருவரின் காமெடி காட்சிகள் இந்த படத்தில் சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது. இந்த படத்தில் தான் நடிகை கௌதமி அறிமுகமானார். ரஜினியுடன் நடிக்க அவர் பயந்து கொண்டிருந்த நேரத்தில் ரஜினி தான் அவருக்கு தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார்.

guru sishyan2

இந்த படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சியில் ரஜினி மட்டுமே நடிக்க வேண்டியது இருந்தது. ஆனால் ரஜினி, பிரபுவுக்கு அந்த சண்டை காட்சியை விட்டுக் கொடுத்தார். பிரபு நன்றாக வளரட்டும், அதனாலேயே விட்டுக் கொடுத்தேன் என்று இயக்குனர் எஸ்பி முத்துராமனிடம் ரஜினி கூறியதாகவும் தகவல் உண்டு.

பிரபுவின் முதல் படமும் தோல்வி… 100வது படமும் தோல்வி… சிவாஜி கணேசன் தான் காரணமா?

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக அரக்கு மாளிகை ஒன்றில் ஸ்டண்ட் காட்சியை படமாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆந்திராவில் உள்ள அரக்கு மாளிகையில் சென்று எடுக்கலாம் என்று நினைத்த நிலையில்தான் நான்கு நாட்கள் மட்டுமே ரஜினியின் கால்ஷீட் இருந்தது.

இதனால் ஒரே நாளில் அரக்கு மாளிகை செட்டை சென்னையில் போட்டு அதில் இரண்டு நாட்களில் கிளைமாக்ஸ் காட்சியை எஸ்.பி.முத்துராமன் படமாக்கினார். 25 நாள் ரஜினிகாந்த் இந்த படத்திற்காக கால்ஷீட் கொடுத்த நிலையில் 23 நாட்களில் அவருடைய காட்சியை முடித்துவிட்டு மீதம் இரண்டு நாட்களை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து நடித்துள்ளார்களா? எத்தனை படங்கள் தெரியுமா?

இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்டது என்பதால் இந்த படத்தை ஆடியன்ஸ்கள் திரும்பப் திரும்ப பார்த்ததாகவும் கூறப்பட்டது. ரஜினிக்கு பல ஹிட் படங்களை எஸ்.பி.முத்துராமன் கொடுத்திருந்தாலும், மிகக் குறுகிய காலத்தில் குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய லாபம் பெற்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் என்பதால் அவருக்கு கோடிகளில் லாபம் குவிந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews