விஜயகாந்தை இயக்கிய படம் வெளியாகும் முன் இயக்குனருக்கு நடந்த சோகம்.. அடுத்து விஜய் படம் பண்ண வேண்டியது..

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ’பாட்ஷா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் திருப்பதிசாமி. இவர் விஜயகாந்தை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம், பலரையும் வேதனையில் ஆழ்த்தி இருந்தது.

இயக்குனர் திருப்பதிசாமி சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற பின்னர் ஆனந்த விகடன் நிருபராக வேலைக்கு சேர்ந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ’வீரா’ என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து ’பாட்ஷா’ படத்திலும் அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

இதன் பின்னர் தெலுங்கில் இயக்குனரானார். வெங்கடேஷ் நடித்த ‘கணேஷ்’ என்ற திரைப்படத்தை இவர் இயக்கினார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதால், மீண்டும் தெலுங்கில் ஆசாத் என்ற படத்தை இயக்கினார் திருப்பதிசாமி. இந்த படத்திலும் நாகார்ஜூனா நடித்திருந்த சூழலில், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது.

narasimha

இந்த நிலையில் தமிழில் அவர் முதல் முறையாக ’நரசிம்மா’ என்ற படத்தை இயக்கினார். விஜயகாந்த் நடித்த இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி திருப்பதி சாமி காலமானார். அதன் பிறகு அவருடைய உதவி இயக்குனர்கள் இந்த படத்தின் தொழில்நுட்ப பணியை முடிக்க உதவி செய்தனர்.

தமிழில் முதல் படத்தை இயக்கி அந்த படம் வெளிவரும் முன்னரே ஒரு திறமையான இயக்குனர் காலமானது தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பாக கருதப்பட்டது. தெலுங்கில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்த திருப்பதிசாமி தமிழிலும் அடுத்தடுத்து ஹிட்டான படங்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றார் போல் அவருக்கு முதல் படமே விஜயகாந்த் படமாக அமைந்ததால் அந்த படம் வெளியானவுடன் அவருக்கு வாய்ப்புகள் குவியும் என்றும் அவரது குடும்பத்தினர் கனவு கண்டனர். அந்த கனவு நலமாகாமல் துரதிஷ்டவசமாக அவர் காலமாகிவிட்டார். ‘நரசிம்மா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே அவர் இரண்டு படங்கள் இயக்க ஒப்பந்தம் ஆனதாக கூறப்பட்டது. அதில் ஒரு படத்தில் விஜய் நடிக்க இருந்ததாகவும் கூறப்பட்டது. தெலுங்கில் அவர் இயக்கிய ’ஆசாத்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமாக அந்த படம் அமைய இருந்தது என்பதும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக  பிரியங்கா சோப்ரா நடிக்க இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த படம் தொடங்கும் முன்பே அவர் விபத்தில் இறந்து விட்டதால் படம் டிராப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ’ஆசாத்’ படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்து ‘வேலாயுதம்’ என்ற படமாக எம் ராஜா இயக்கினார் என்பதும் அந்த படத்தில் விஜய் நடித்ததாகவும் கூறப்பட்டது. இயக்குனர் கரு பழனியப்பன், திருப்பதிசாமிக்கு மிக நெருங்கிய நண்பர் ஆவார். அதனால்தான் அவரது இயக்கத்தில் உருவான ’சதுரங்கம்’ என்ற திரைப்படத்தில் நாயகன் ஸ்ரீகாந்தின் பெயர் திருப்பதிசாமி என்று வைத்திருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...