400 படங்கள்ல நடிச்சும் மகள் கல்யாணத்தை நடத்த பணமில்ல.. இறுதி காலத்திலும் தவித்த காமெடி நடிகர்..

காமெடி நடிகர் செந்தில் என்றால் கவுண்டமணியுடன் ஏராளமான படங்களில் நடித்த செந்தில் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் செந்தில் என்ற பெயரை கேட்டதும் ஞாபகத்திற்கு வரும் மற்றொரு நடிகர் தான் கோவை செந்தில். மிகச்சிறந்த காமெடி நடிகரான இவர், பாக்யராஜ் இயக்கத்தில் உருவான பல படங்களில் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத உண்மை.

கோவை செந்தில் கிட்டத்தட்ட 400 தமிழ் படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ’ஒரு கை ஓசை’ என்ற திரைப்படத்தில் தான் இவர் நடிகராக அறிமுகமானார். கோவையைச் சேர்ந்தவர் என்பதாலும் ஏற்கனவே செந்தில் என்ற நடிகர் இருந்ததாலும் இவரது பெயர் கோவை செந்தில் என்று அழைக்கப்பட்டது.

கோவை அருகே பள்ளிபாளையம் என்பது தான் இவரது சொந்த ஊர். பத்தாவது வரை படித்த இவர் நாடகங்களில் நடிக்க தொடங்கிய நிலையில் தான் தற்செயலாக பாக்யராஜை சந்தித்தார். அவருடைய படத்தில் தொடர்ச்சியாக நடிக்கும் வாய்ப்பும் பின்னர் பல முறை கைகூடி வந்தது.

kovai senthil2

‘ஒருகை ஓசை’ படத்திற்கு பிறகு மௌன கீதங்கள், இது நம்ம ஆளு, என் ரத்தத்தின் ரத்தமே, ஆராரோ ஆரிராரோ, அவசர போலீஸ் 100 போன்ற பாக்யராஜ் படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். அதுமட்டுமின்றி ஜென்டில்மேன், ராஜகுமாரன், என் ஆசை மச்சான், மேட்டுப்பட்டி ராசா, நாட்டாமை, மைனர் மாப்பிள்ளை, அவ்வை சண்முகி, மின்சார கனவு போன்ற பல படங்களில் நடித்தார்.

1980 முதல் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் இவர் தமிழ் சினிமாவில் காமெடி கேரக்டரில் நடித்துக் கொண்டு இருந்தார். அதே போல கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய்  என பல பிரபலங்களுடனும் இணைந்து நடித்து உள்ளார்.

பாக்யராஜ் படத்தில் மட்டுமின்றி பார்த்திபன் இயக்கிய புதிய பாதை திரைப்படத்திலும் கோவை செந்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். கோவை செந்திலுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் முத்துக்காளை. இவர் கோவை செந்தில் குறித்து கூறியபோது, ‘நாங்கள் இருவரும் ஒரே மேன்ஷனில் தான் தங்கி இருந்தோம். பல திரைப்படங்களில் நாங்கள் இணைந்து நடித்தோம். எங்கள் நட்பு பல ஆண்டுகளாக தொடர்ந்தது’ என ஒரு சில பேட்டிகளில் கூறியுள்ளார்.

குறிப்பாக பஞ்சாயத்து காட்சிகள் இருந்தால் கோவை செந்தில் இல்லாமல் இருக்காது என்றும் கோவை செந்தில், முத்துக்காளை உள்ளிட்ட ஒரு சிலரை பஞ்சாயத்து குரூப் என்றே சினிமாவில் செல்லமாக அழைப்பார்கள் என்றும் கூறினார்.

kovai senthil1

கடந்த 2017 ஆம் ஆண்டு அய்யனார் வீதி என்ற திரைப்படத்தில் நடித்த கோவை செந்தில், உடல்நலக் குறைவு காரணமாக 74 ஆவது வயதில் காலமானார். இருப்பினும் அவர் ஏற்கனவே நடித்த ஒரு சில திரைப்படங்கள் அதன் பின்னர் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

400 படங்களில் நடித்த போதிலும் தன் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாத நிலையில் வறுமையில் கோவை செந்தில் இருந்ததாகவும் அதன் பின்னர் நடிகர்கள் சிலர் செய்த உதவியால் தான் அவரது மகளுக்கு திருமணமானதாகவும் முத்துக்காளை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews