நான் ஒண்ணும் இசைஞானி கிடையாது… கர்வத்தை தூக்கி எறிந்த இளையராஜா!

அன்னக்கிளி படத்தின் மூலம் இந்திய சினிமா உலகில் அறிமுகமாகி பின்னர் தனது மயக்கும் மந்திர இசையால் மக்களைக் கட்டிப் போட்டு ராஜாங்கம் நடத்தி வருபவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இளையராஜா.

இவரது இசையில் வெளிவந்த 1000-ஆவது படம் பாலா இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை படமாகும். அதற்குப் பிறகும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான விடுதலை படப்பாடல்கள் பழைய இளையராஜாவை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

இந்நிலையில் இளையராஜாவைப் பற்றி ஒரு கூற்று நிலவுகிறது. அவர் மிகுந்த கர்வம் கொண்டவர். தன் இசையால்தான் படங்கள் ஹிட் ஆகிறது என்ற நினைப்பில் பேசுபவர் என்றெல்லாம் அவரைப் பற்றிய விமர்சனங்கள் வெளிவந்தன. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இசைஞானி தற்போது சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

அந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசும் போது, “நான் சினிமாவில் இசையமைப்பதற்கு முன்பே இசை குழுவில் இணைந்து பழைய பாடல்களை மீண்டும் இயற்றும் போது நிறைய கைதட்டல்கள், பாராட்டுகள் வரும். அப்போதெல்லாம் அந்தக் கைதட்டல்கள், பாராட்டுகள் அனைத்தும் எனக்குத் தான் என்ற கர்வம் இருந்தது. இதனால் பெருமிதமும் அடைந்தேன். ஆனால் நாளாக நாளாக பக்குவப் படும் போது நாம் யார் இசையை இசைக்கிறோம், யார் பாடலைப் பாடுகிறோம் எம்.எஸ்.வி போன்றோரின் இசையை மீண்டும் இசைக்கிறேன். முறைப்படி பார்த்தால் அந்தப் பாராட்டுகள், புகழ் எல்லாமே அவருக்குத்தானே போக வேண்டும்.

அப்படிப் பார்த்தால் என் இசையைக் கேட்டு கைதட்டியவர்கள், பாராட்டியவர்கள் எல்லாம் எனக்கு அந்த பெருமையைத் தரவில்லை. நான் இசைத்த பழைய பாடல்களின் இசையமைப்பாளர்களுக்குத்தான் தந்திருக்கிறார்கள் அல்லவா என்று யோசிக்க அன்றே எனது கர்வம் விடுபட்டு விட்டது. நான் ஒன்றும் இசைஞானி கிடையாது. அந்தப் பெயருக்கு தகுதியானவன் என்றால் அது கேள்விக்குறி தான்.“ என்று கூறினார்.

மேலும் அவர், “ஒரே நேரத்தில் பல படங்களில் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொண்டேன். அதுமட்டுமில்லாமல் 3 நாட்களில் 3 படங்களுக்கு முழு பின்னணி இசைப் பணிகளையும் முடித்துக் கொடுத்தேன். உலகிலேயே இதுபோல் இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டது யாரும் இல்லை“ எனவும் அந்நிகழ்ச்சியில் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.