பிரசவத்திற்காக காத்திருக்கும் பெண்களா நீங்கள்? உங்கள் மருத்துவமனை பை தயாரா?

மருத்துவமனை பை என்பது ஒரு பெண் பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொழுது எடுத்துச் செல்ல வேண்டிய அவர்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய ஒரு பை ஆகும். பிரசவத்திற்கான தேதி நெருங்க நெருங்க ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்புக் கொள்ளாது. எதிர்பார்ப்பு, கவலை, பரபரப்பு, அச்சம், மகிழ்ச்சி, சந்தேகங்கள் என பலவிதமான உணர்ச்சிகளின் கலவையாக இருப்பார்கள்.

புதிய வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பையை எப்பொழுதும் தயார் நிலையில் வைக்க வேண்டியது அவசியம்.

 

images 2 23

மருத்துவர் பிரசவத்திற்கு என்று ஒரு தேதியை குறிப்பிட்டு தந்திருந்தாலும் அவர் குறிப்பிட்ட தேதிக்கு சில வாரங்கள் முன்னரே கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனை பையினை தயாராக வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். கர்ப்பிணிகளுக்கு 36 ஆவது வாரம் முடிந்த பின்னர் இந்த பையினை தயாராக வைத்திருக்க வேண்டும். காரணம் சிலருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் பிரசவ வலி வரலாம் எனவே உடனடியாக மருத்துவமனை செல்லும் பொழுது இந்தப் பை தயாராக இருந்தால் தேவையற்ற பரபரப்பையும் அலைச்சலையும் குறைத்திட உதவும். மருத்துவமனை சென்ற பின்பு அது இல்லை இது இல்லை என்று எதற்காகவும் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் வேண்டாம்.

1. உங்களுடைய ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனை முடிவுகள் அடங்கிய கோப்பினை முதலில் வைக்கவும். மருத்துவர் உங்களுக்கு என்னென்ன மருந்துகள் பரிந்துரைத்துள்ளார் என்னென்ன பரிசோதனைகளை மேற்கொண்டீர்கள் என்பதை குறித்த ரிப்போர்ட்டுகளும் அந்த கோப்பில் அவசியம் இருக்க வேண்டும்.

2. மருத்துவமனையில் சிலர் ஒரு வாரம் வரையில் கூட இருக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். எனவே அதற்கு தகுந்தார் போல உங்களுக்கு தேவையான உடைகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

3. குழந்தை பிறந்த பிறகு பாலூட்டுவதற்கு என்றே வடிவமைக்கப்பட்ட வசதியான உடைகள் நிறைய இருக்கின்றன. அவைகளில் 2 செட் உங்கள் பைக்குள் இருக்கட்டும்.

4. உங்களின் குளியல் சோப்பு, பிரஷ், பேஸ்ட், தேங்காய் எண்ணெய், லிப் பாம் ஆகியனவற்றை ஒரு பையில் தனியாக போட்டு வைத்து விடுங்கள்.

5. பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு அதிக அளவு உதிரப்போக்கு ஏற்படும். எனவே அதற்கு தகுந்தார் போல கனமான நாப்கின்களை வாங்கி உங்கள் பையில் வைத்துக் கொள்ளுங்கள்.

6. உங்கள் பிஞ்சு குழந்தைகளை படுக்க வைப்பதற்கு தேவையான மென்மையான துணி விரிப்புகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் (அல்லது 2 காட்டன் புடவைகள்).

7. காட்டனில் மெல்லிய வெள்ளை துணி வாங்கி அதை சதுர வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்த விரும்புவோர் மென்மையான டயப்பர்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

images 2 21

8. குழந்தைகளுக்கான பேபி வைப்ஸ் ஒன்றையும் உங்கள் பையில் மறக்காமல் வைத்து விடுங்கள்.

9. வெந்நீர் போடுவதற்கு ஏதுவான கெட்டில் ஒன்றும், பால் தேனீர் போன்ற பானங்கள் வாங்குவதற்காக ஃப்ளாஸ்க் ஒன்றும் அவசியம்.

10. சி செக்சன் செய்பவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்ததும் சிறிது நேரம் உடலில் கடுமையான நடுக்கம் ஏற்படும். எனவே குளிரினை தாங்கும் வகையில் கம்பளி, சாக்ஸ், ஸ்கார்ஃப் போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.

11. குழந்தைக்கு தேவையான லோஷன், எண்ணெய், ஸ்வெட்டர், மெல்லிய உடைகள் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

12. உங்களின் ஐடி கார்டுகள் உள்ள வாலட், போன் சார்ஜர், முக்கியமான நபர்களின் எண்கள் அடங்கிய ஒரு குறிப்பேடு, கண்ணாடி அணியும் பழக்கமுடையவராக இருந்தால் உங்களின் கண்ணாடி அல்லது லென்ஸ், ஒரு சிறிய கத்தரிக்கோல், கத்தி போன்ற பொருட்களையும் அந்தப் பையில் வைக்க தவறி விடாதீர்கள்.

இப்பொழுது உங்கள் மருத்துவமனை பை தயாரா? இனி உங்கள் புது வரவை வரவேற்க மகிழ்ச்சியோடு காத்திருங்கள். வாழ்த்துக்கள்!!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews