வடிவேலு பஞ்சாயத்து சீன்ல பேரெடுத்த நடிகர்.. திடீர் கண்ணையானு அவர் பேர் பின்னாடி இருக்குற அற்புதமான காரணம்..

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான என்னத்த கண்ணையா என்பவரை கிட்டத்தட்ட அனைவரும் அறிந்திருப்பார்கள். ’வரும் ஆனா வராது’ என்ற வசனம் தான் இவரது பெயரை சொன்னவுடன் ஞாபகம் வரும். அந்த வகையில் என்னத்த கண்ணய்யா போலவே திடீர் கண்ணையாவும் ஒரு காமெடி நடிகர் தான். இவர் 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

திடீர் கண்ணையா சென்னையை சேர்ந்தவர். இளமை காலத்தில் அவர் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே கோச் ஆலையில் வேலை பார்த்தார். அப்போதுதான் அவருக்கு பாலசந்தர் இயக்கத்தில் உருவான ’அவள் ஒரு தொடர்கதை’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவரது நடிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் அதன் பின்னர் அவர் பல திரைப்படங்களில் பல்வேறு விதமான கேரக்டர்களில் நடித்தார்

‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற திரைப்படத்தில் சுஜாதா அலுவலகம் செல்லும் பேருந்தில் கண்டக்டராக நடித்திருப்பார். இந்த படத்தை அடுத்து ’அபூர்வ ராகங்கள்’ ’பிரியா’ ’பட்டணத்து ராஜாக்கள்’ ’வெள்ளை ரோஜா’ ’நீதியின் மறுபக்கம்’ ’இரவு பூக்கள்’ ’கூட்டுப்புழுக்கள்’ ’மனக்கணக்கு’ ’நெத்தியடி’ ’வணக்கம் வாத்தியாரே’ ’வைதேகி கல்யாணம்’ ’எல்லைச்சாமி’ ’பொறந்த வீடா புகுந்த வீடா’ ‘நல்லதே நடக்கும்’ உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் கண்ணையா கவுண்டமணியுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். அதன் பிறகு வடிவேலு உள்பட பல பிரபல காமெடி நடிகர்களுடன் இணைந்து அவர் நடித்த காட்சிகள் இன்றளவிலும் அதிக ரசிகர்களை சம்பாதித்து தான் வருகிறது.

ஒரு திரைப்படத்தில் வடிவேலுவிடம் ஆடு திருட்டை விசாரிக்கும் பஞ்சாயத்தை கலைக்கும் காட்சியில், ஆட்டை திருடு கொடுத்த அப்பாவி கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார். அந்த காட்சி இன்னும் அனைவர் மனதிலும் நிற்கும் என்பதுடன் மீம் டெம்பிளேட் ஆகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ’இனி வரும் காலம்’ என்ற படம் தான் அவரது கடைசி படம். நடிகர் திடீர் கண்ணையா தமிழ் மட்டுமின்றி ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் திடீர் கண்ணையா ராஜேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ரமேஷ் என்ற மகனும் சித்ரா என்ற மகளும் உள்ளனர்.

முன்னதாக,நாடகங்களில் கண்ணையா நடித்த சமயங்களில், திடீரென தோன்றி வசனம் பேசும்படியான காட்சிகளில் நடித்ததால் ‘திடீர்’ என்ற பெயரும் இணைந்து கொண்டது. இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி தனது 77வது வயதில் அவர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவர் மறைந்தாலும் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான காமெடி நடிகராக இருந்த திடீர் கண்ணையா பல படங்களில் தனது காமெடி நடிப்பு முத்திரையை பதித்திருந்தார் என்பதும் குறிப்பிடப்பட்டது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...