சத்யராஜுக்கே அல்வா கொடுத்த நடிகர்.. மறைந்தாலும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத காமெடியில் நடித்த பிரபலம்

பொதுவாக முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து அந்த காட்சியை இன்னும் சுவாரஸ்யமாக்க சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் நிச்சயம் தேவை. அந்த வகையில் முக்கியமான ஒருவர் தான் அல்வா வாசு. இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள பல காமெடி காட்சிகள், எப்போது பார்த்தாலும் சிறப்பை வரவைக்க கூடிய வகையில் அமைந்திருக்கும்.

மதுரையை சேர்ந்த வாசு, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே சென்னைக்கு வந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் போது இசையில் அல்வா வாசுக்கு மிகுந்த நாட்டம் உண்டு. அவர் கிடார் இசைப்பதில் வல்லவராகவும் இருந்துள்ளார்.

சென்னைக்கு சென்றால் பெரிய இசையமைப்பாளராகி விடலாம் என்று அவரது நண்பர்கள் கூறியதையடுத்து தான் அவர் சென்னை வந்தார். ஆனால் சென்னை வந்த பிறகுதான் அவருக்கு  இசையில் சாதிப்பது அவ்வளவு எளிது இல்லை என்பதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்த அவர் பல சினிமா அலுவலகங்களில் ஏறி இறங்கியும் அவருக்கு வாய்ப்பு தர மறுத்துவிட்டனர். அதுமட்டுமின்றி உன்னை பார்த்தால் கிடார் இசைப்பவன் போல் தெரியவில்லை என்று பலர் ஏளனம் செய்து அவமதித்து அனுப்பி விட்டதாகவும் கூறப்படுவதுண்டு.

alwa vasu1

இதனை அடுத்து அவரை ஊருக்கு வந்து விடச் சொல்லி அவருடைய பெற்றோர்கள் கூறினாலும் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இனி சென்னை தான் என்றும் அவர் உறுதியாக இருந்தார். அதன் பிறகு தான் அவர் மணிவண்ணன் உதவியாளராக சேர்ந்தார்.

இயக்குனர் மணிவண்ணன் உதவியாளராக பல திரைப்படங்களில் பணிபுரிந்த வாசு, வடிவேலுவுடன் ஏராளமான படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். இவர் கிட்டதட்ட 900 படங்களில் நடித்துள்ளார். வாழ்க்கைச் சக்கரம், வெற்றிப்படிகள், உன்னை வாழ்த்தி பாடுகிறேன், அமைதிப்படை, சின்னமணி, தமிழச்சி, முறை மாப்பிள்ளை, விவசாயி மகன், நினைத்தேன் வந்தாய், மூவேந்தர், உன்னைத் தேடி உட்பட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் மட்டுமின்றி அவர் ஒரே ஒரு தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். அதுதான் ‘மாமா மாப்பிள்ளை’ என்ற தொலைக்காட்சி தொடர். இந்த தொடரில் அவர் டாக்டர் கேரக்டரில் நடித்திருப்பார். அதேபோல் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் டப்பிங் கலைஞராகவும் நடித்துள்ளார்.

’அமைதிப்படை’ திரைப்படத்தில் கஸ்தூரிக்கு சத்யராஜ் அல்வா கொடுக்கும் காட்சி வரும். அந்த அல்வாவை சத்யராஜிடம் கொடுத்ததால் தான் அவருக்கு அல்வா வாசு என்ற பெயர் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு  ’சவரிக்காடு’ என்ற திரைப்படத்தில் நடித்த பின்னர் அவர் காலமாகிவிட்டார். அதன் பிறகு அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியானது. இசையமைப்பாளர் என்ற கனவுடன் மதுரையிலிருந்து சென்னை வந்த அல்வா வாசு பொருளாதார நெருக்கடி காரணமாக கடைசி காலத்தில் மிகவும் வறுமையில் இருந்ததாக கூறப்படுவதுண்டு. கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் உடல் நல குறைவு காரணமாக 56 வது வயதில் காலமானார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...