இனிமேல் தாழ்தள பேருந்துகள் மட்டுமே கொள்முதல்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

இனிமேல் தாழ்தள பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை ஹைகோர்ட்டில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே 1107 பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பாக அரசு டென்டரை வெளியிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் 1107 பேருந்துகளில் 157 பேருந்துகளை தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்படும் என்றும் மீதமுள்ள 950 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டர் அடிப்படையில் நடைமுறைகளை தொடர அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

157 தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு தனியாக டெண்டர் விடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே கோரப்பட்ட டென்டரில் 344 பேருந்துகளை சேர்த்து மொத்தம் 499 தாழ்தள பேருந்துகளை அனைத்து வழித்தடங்களிலும் இயக்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது

உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஒரு சில உத்தரவை பிறப்பித்தும் தாழ்தள பேருந்துகளை இயக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள் இனிவரும் காலங்களில் தாழ்தள பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள 499 தாழ்தள பேருந்துகள் சென்னை மதுரை திருச்சி கோவை ஆகிய நகரங்களில் இயக்கப்பட உள்ளதாகவும் நான்கு நகரங்களுக்கும் தனித்தனியே செயல்களை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மாற்று திறனாளிகளுக்கு கர்ப்பிணிகளுக்கு முதியோர்களுக்கு சேவை செய்யும் வகையில் போக்குவரத்து துறை அமைய வேண்டும் என்று தாழ்தள பேருந்துகளை இயக்கினால் மட்டுமே அது சாத்தியம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறி இறங்க டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பொறுமையாக செயல்பட வேண்டும் என்றும் அதற்கான பயிற்சி அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews