8 வயது சிறுமி சொன்ன பொய்.. தர்ம அடி வாங்கிய அப்பாவி டெலிவரி பாய்.. பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

எட்டு வயது சிறுமி சொன்னா போய் காரணமாக டெலிவரி பாய் ஒருவர் சரமாரியாக தர்ம அடிவாங்கிய நிலையிலும் அந்த டெலிவரி பாய், சிறுமி மீது பாசம் காட்டிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த டெலிவரி பாய் ரவி கிரண் என்பவர் பெங்களூரில் உணவு டெலிவரி செய்யும் நபராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஒரு அப்பார்ட்மெண்டில் இருந்து உணவு ஆர்டர் வந்தது. இதனை அடுத்து அவர் அந்த உணவை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றபோது அந்த வீட்டில் இருந்த பெற்றோர்கள் பரபரப்பாக இருந்தனர். என்னவென்று விசாரித்த போது தங்களது எட்டு வயது சிறுமியை காணவில்லை என்று கூறினர். இதனை அடுத்து டெலிவரி பாயும் சேர்ந்து அந்த சிறுமியை தேடிய போது அந்த சிறுமி மொட்டை மாடியில் இருப்பது தெரியவந்தது.

அப்போதுதான் ஒரு பெரிய ட்விஸ்ட் நடந்தது, அந்த டெலிவரி பாயை பார்த்த அந்த சிறுமி இவர்தான் தன்னை மொட்டை மாடிக்கு அழைத்து வந்ததாகவும் தன்னை தாக்கியதாகவும் கையை கடித்ததாகவும் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் உடனே டெலிவரி பாயை அடித்து நொறுக்கினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ளவர்களும் அந்த டெலிவரி பாயை அடித்தனர். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று டெலிவரி பாய் கத்தி கூறிய போதிலும் யாருடைய காதிலும் அவருடைய குரல் கேட்கவில்லை.

இதுகுறித்து விசாரணை செய்ய போலீசார் அந்த அப்பார்ட்மெண்டுக்கு வந்தபோது சிசிடிவி காட்சியை பார்த்தனர். அப்போது சிறுமி சொல்வது பொய் என்பது தெரிய வந்தது. சிறுமிதானாகவே மொட்டை மாடிக்கு நடந்து சென்றதாகவும் டெலிவரி பாய் அவர் சந்திக்கவே இல்லை என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து டெலிவரி பாய் மீது எந்த விதமான வழக்கும் பதிவு செய்யாமல் காவல்துறையினர் அவரை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தான் அந்த சிறுமி மீது அல்லது அவரது பெற்றோர் மீது புகார் அளிக்கப் போவதில்லை என்றும் ஏனெனில் தனக்கும் ஒரு குழந்தை இருக்கிறது என்றும் அவர் கூறினார். ஆனால் அந்த சிறுமி ஏன் தன் மீது பழி சுமத்தினார் என்று தனக்கு தெரியவில்லை என்று அப்பாவியாக கூறினார்.

மொட்டை மாடிக்கு தற்செயலாக வந்த அந்த சிறுமி ஏன் மொட்டை மாடிக்கு வந்தாய் என்ற பெற்றோர்கள் திட்டுவார்கள் என்பதை என நினைத்து உடனடியாக டெலிவரி பாய் மீது பழியை தூக்கி போட்டு உள்ளார் என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews