இந்தியாவில் மட்டும் 500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய அமேசான்.. அதிர்ச்சி தகவல்..!

கடந்த சில மாதங்களாகவே வேலை நீக்கம் என்ற செய்தி தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதும் ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய கம்பெனி நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், வால்ட் டிஸ்னி, ஃபேஸ்புக், டுவிட்டர், அமேசான் உள்பட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தன. இதனால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம், வட்டி விகிதம் அதிகரிப்பு, பொருளாதார மந்த நிலை ஆகியவை காரணமாக வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிறுவனங்கள் தரப்பில் கூறினாலும் வேலை நீக்க நடவடிக்கையை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது இந்தியாவில் மட்டும் மேலும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமேசான் நிறுவனத்தின் வலை சேவைகள் (AWS), மனித வளங்கள் உட்பட ஒருசில துறைகளில் பணிநீக்கங்கள் அதிகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட் போன்ற போட்டியாளர்களிடமிருந்து அமேசான் நிறுவனம் அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்தியாவில் பணிநீக்கங்கள் செய்யப்படுள்ளன. அமேசான் இந்தியாவில் தனது இ-காமர்ஸ் வணிகத்தை வளர்க்க போராடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணிநீக்க நடவடிக்கைகள் வேலையிழந்த ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலர் இளைஞர்கள் என்றும், குறுகிய காலமே நிறுவனத்தில் இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. பணிநீக்க நடவடிக்கை காரணமாக மீதமுள்ள ஊழியர்களின் மன உறுதியிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பணிநீக்கங்கள் குறித்து அமேசான் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews