ஒரே ஒரு படத்திற்காக.. 18 வருட இடைவெளி விட்டு நடிக்க வந்த நடிகை.. அது என்ன படம்னு தெரியுமா?

ரசிகர்கள் மனதில் பெயர் எடுத்து நிலைத்து நிற்க நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்ற தேவையே இல்லை. ஒரு சில படங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கதாபாத்திரங்களில் நடித்தாலே காலம் கடந்து நிலைத்து நின்று விடலாம். அப்படி 30 வருடங்கள் தமிழ் சினிமாவில் நடித்து ஒரு சில முக்கியமான கதாபாத்திரங்கள் மூலம் பெயர் எடுத்தவர் தான் நடிகை மாதுரி தேவி.

நடிகை மாதுரி தேவி சென்னை, ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் சிறு வயதிலேயே நாடகங்களில் நடித்து தன்னுடைய கலை ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்த போதிலும் அவருடைய பெற்றோர் சினிமாவில் நடிக்க அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் ஒரு கட்டத்தில் அவர் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார்

கடந்த 1938 ஆம் ஆண்டு எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் அறிமுகமானார். ஆனால் அந்த கேரக்டரை மக்கள் மனதில் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. இதனையடுத்து அவர் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து ’லட்சுமி விஜயம்’ என்ற படத்தில் அமுதா, குமுதா என்று இரட்டை கேரக்டர்களில் நடித்தார். இந்த கேரக்டர்கள் தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.

தொடர்ந்து 1950 களில் அவர் ஏராளமான படங்களில் நடித்தார். மோகினி, மந்திரிகுமாரி, பொன்முடி, தேவகி, மர்மயோகி, ராஜாம்பாள், என் தங்கை, உள்பட பல படங்களில் நடித்தார். இவற்றில் மந்திரிகுமாரி படத்தில் அவர் நடித்த அமுதவல்லி என்ற கேரக்டர் மிகவும் பிரபலம். இது தவிர வேலைக்காரன், ஜமீன்தார், இன்ஸ்பெக்டர், மனிதனும் மிருகமாகலாம், ஆசை அண்ணா அருமை தம்பி போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று கொடுத்த படம் என்றால் அது ’நல்லதங்காள்’ படம் தான்.

வறுமை காரணமாக தனது குழந்தைகளையே கிணற்றில் போட்டு கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ளும் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் நல்லதங்காளாகவே வாழ்ந்து இருந்தார். அவரது உருக்கமான நடிப்பை பார்த்து பார்வையாளர்களும் கூட கண்ணீர் வடித்திருந்தனர். எஸ்ஏ நடராஜன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நம்பியார், டி எஸ் பாலையா உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடித்த மாதுரிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

தொடர்ந்து அவர் ஒன்றே குலம், புது வாழ்வு, அதிசய பெண், மாலா, ஒரு மங்கள விளக்கு போன்ற படங்களில் நடித்த. 1960 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் கிட்டத்தட்ட திரையில் இருந்து விலகிவிட்டார் என்று சொல்லலாம். இருப்பினும் தனது நெருங்கிய நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 1978 ஆம் ஆண்டு ’வெற்றி திருமகள்’ என்ற படத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடித்தார். அந்த படமே அவருடைய கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை மாதுரி தேவி 1990 ஆம் ஆண்டு தனது 62 ஆவது வயதில் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews